விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘Chiyaan 63’ படம் ஏப்ரல் 17 விக்ரம் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டது. சத்யா ஜோதி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் புரோமோ வெளியான நிலையில், நிவின் பாலியுடன் ‘சர்வம் மாயா’வில் நடித்த ரியா ஷிபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தீவிர விக்ரம் ரசிகையான ரியா, ஹீரோயின் அல்லாத முக்கிய பாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் துவங்க உள்ளது `Chiyaan 63' படம். இப்படத்தின் அறிவிப்பு விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. சத்யா ஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வீடியோ புரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டது. இருமுகன் படத்திற்கு அடுத்து இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது விக்ரம் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸின் மகளும், `வீர தீர சூரன்' பட தயாரிப்பாளருமான ரியா ஷிபு ஒரு பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ரியா ஏற்கெனவே நிவின் பாலியுடன் நடித்த `சர்வம் மாயா' படத்தில் டெலுலு பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு முன்பு இன்ஸ்ட்டாவில் இவருக்கு என பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் தீவிர விக்ரம் ரசிகை என்பதும் கூடுதல் தகவல். இப்போது விக்ரம் கூடவே நடிக்கும் வாய்ப்பு என்றால் வேண்டாம் என்று மறுப்பாரா? உடனே சம்மதம் சொல்லி இருக்கிறார். ரியாவுக்கு ஒரு முக்கிய பாத்திரம் தான், ஆனால் ஹீரோயின் வேடமில்லையாம்.
இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில்லை என்பதால் அதற்கு தகுந்தது போல ஒரு நடிகையை தேடி வருகிறார்களாம். இது தவிர முக்கியமான ரோலில் ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்க உள்ளனர். முதலில் இப்படத்தின் ஷூட்டிங் மே முதல் வாரத்தில் துவங்கும் என சொல்லப்பட்டது. இப்போது ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்கு கிளம்புகின்றனர் என தகவல். பரபரப்பாக முழு படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் தான் நடைபெற உள்ளதாம். தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் விக்ரம் தேதிகள் ஒதுக்கி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.