2025 ஆம் ஆண்டு அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் உலக நிகழ்வுகள் மூலம் இந்தியாவையும் உலகத்தையும் பாதித்த முக்கிய தருணங்களை பதிவு செய்த ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு பல அறிமுக இயக்குநர்கள் அசத்தலான படங்களை கொடுத்திருக்கிறார்கள். பெரிய இயக்குநர், நடிகர்களின் படங்கள் மண்ணை கவ்வ, தியேட்டர் ஓனர்களை மட்டுமல்ல, சினிமா ரசிகர்களை காப்பாற்றியது கூட அறிமுக இயக்குநர்கள் தான். அப்படி இந்தாண்டு சிறப்பான படங்களையும், வசூல் ரீதியான வெற்றியையும் கொடுத்த அறிமுக இயக்குநர்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வருடத்தின் முதல் மாதத்தில் வந்து பெரிய கவனம் பெற்று ஹிட்டானது ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்த `குடும்பஸ்தன்'. வி சேகர் டைப்பிலான நடுத்தர வர்க்கத்து குடும்ப சிக்கல்கள், அவர்கள் முன்னேற்றத்தின் முயற்சிகள் போன்றவற்றை கலகலப்பாக பேசியது படம். சிவப்பு தொப்பி முதல் சுந்தர்ராஜன் சொல்லும் 'தெரியாது' வரை படத்தின் விஷயங்கள் பல மீம் டெம்பிளேட்கள் ஆனது தனிக்கதை.
குடிப்பழக்கத்தை கொண்டாட்டமாகவும், மன ஆறுதலுக்கான மருந்தாகவும் காட்சிப்படுத்தும் சினிமாக்களுக்கு மத்தியில், குடியின் தீங்கையும், குடி நோயாளிகளின் மீது கவனம் தேவை என்பதையும் `பாட்டல் ராதா'வில் அழுத்தமாக பதிவு செய்தார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். குடியின் பொருட்டு அல்லலுறும் மனிதன், அவனது குடும்பம் படும் பாடுகள் போன்றவை பாடம் என்றால் அதிலிருந்து மீண்டு வரும் ராதா பலருக்குமான நம்பிக்கை கீற்று.
பெண்கள் பிரச்னைகளை ஒரு த்ரில்லர் படத்தின் வழியாக சொல்லியிருந்தார் ஜோஷ்வா சேதுராமன். ஒரு த்ரில்லர் படம் என்ற போதும் அதற்குள் நகைச்சுவையும் குறையாமல் பரபரவென நகரும் ஒரு படமாக கவனம் ஈர்த்தது `ஜென்டில்வுமன்'.
பெண்களுக்கு எதிரான சமூக கட்டமைப்புகளை ஒரு ஹாரர் படத்தின் ஊடாக சொல்லி இருந்தார் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். சாதிய மனநிலை, பாலியல் சீண்டல், ஒரு பெண்ணை பற்றிய வதந்திகளை பரப்பும் சமூக கட்டமைப்பு எனப் பல விஷயங்களை விவாதித்தது `எமகாதகி'.
கறாரான குடும்ப அமைப்புக்குள் வாழும் சகோதரர்களின் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குநர் அவினாஷ் பிரகாஷ். மனதை தொந்தரவு செய்யக்கூடிய அழுத்தமான படமாக அமைந்திருந்தது `நாங்கள்'.
மனதை நெகிழ வைக்கும் Neighbourhood கதையை தன் முதல் படமாக கொடுத்தார் அபிஷன் ஜீவிந்த். இலங்கை குடும்பத்தின் கதை என்ற சீரியஸ் களம். அதில் ஜாலிக்கு எந்தக் குறையும் வைக்காமல் அக்குடும்பத்தில் ஒருவராக நம்மை மாற்றினார்கள் இந்த `டூரிஸ்ட் ஃபேமிலி'. மிக சிறிய பட்ஜெட்டில் உருவாக்கி பெரிய ஹிட்டான முக்கியமான படமாகவும் மாறியது.
சீரியல் கில்லர் படத்தை எதிர்பாராத பல திருப்பங்களுடன் எமோஷன் கலந்தும் கொடுத்தார் இயக்குநர் லோகேஷ் அஜ்ஜிஸ். வழக்கமாக ஒரு தொடர் கொலை என்ற துவங்கும் கதை போக போக எடுக்கும் வேகம் எங்கும் குறைவே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான த்ரில்லராக ஈர்த்தது `லெவன்'.
வயது முடிவதற்குள் அரக்க பறக்க திருமணத்தை நோக்கி தள்ளுவது, பெண்கள் விருப்பங்களுக்கு மதிப்பளிக்ககாது போன்ற விஷயங்களை பேசி இருந்தார் ஷண்முகப் ப்ரியன். `Ashoka Vanamlo Arjuna Kalyanam' படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழில் ஒரு டீசண்ட் படமாக வந்திருந்தது `லவ் மேரேஜ்'.
ஒரு குடும்பத்தின் கதையை அழகாக, உணர்வுப்பூர்வமாக கூறி இருந்தார் கார்த்திகேயா மணி. குடும்ப உறுப்பினர்களுக்குளேயே வரும் கருத்து முரண்கள், ஆனாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இயல்பு என அற்புதமான படம் `மெட்ராஸ் மேட்னீ'. "இதுதான் இந்தக் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக சாப்பிடும் கடைசி விருந்து என்பது அவர்களுக்கே தெரியாது" என சத்யராஜின் வாய்ஸ் ஓவர் வரும் இடம் எல்லாம் கண்கள் தானாக கலங்கும்.
ரம்யாவின் பதின் பருவத்திலிருந்து பெண் என்ற பயணத்தில் அவள் சந்திக்கும் சிக்கல்களை பேசினார் வர்ஷா பரத். எந்த வித பிரச்சாரமும் இல்லாமல் அதே நேரத்தில் பெண் வாழ்வின் சிக்கல்களை மிக இயல்பாகவும், காலத்துக்கு ஏற்ப நவீனமாக மாறிவரும் அடிமைத்தனங்களை பேசியிருந்தது `பேட்கேர்ள்'.
சாதிய ஆணவத்தை 2கே கிட்ஸ்சுக்கு புரியும் வகையில் யூத் ஃபுல்லாக கொடுத்தார் கீர்த்தீஸ்வரன். தாலிக்கு சென்டிமென்ட் இல்ல, பொண்ணோட ஃபீலிங் தான் முக்கியம், இந்த காலத்துலயும் சாதிக்காக கொலை பண்றவன் தான் வல்கர் என நறுக் என முற்போக்கு கருத்துக்களை நவீனமாக பேசியது `ட்யூட்'.
பெண்களுக்கு மட்டும் தான் பிரச்சனையா ஆண்களுக்கும் சிக்கல் உள்ளது என வந்தார் கலையரசன் தங்கவேல். கண்டிப்பாக இப்படம் பேசும் கருத்துக்களில் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆண்கள் ஏதோ பாதிக்கப்பட்டவர்கள் போலவும், பெண் உரிமை பேசுபவர்கள் அனைவரும் போலி பெண்ணியவாதிகள் போலவும் சித்தரிக்கும் அல்லது விதிவிலக்காக நடக்கும் சில விஷயங்களை பொதுமைப்படுத்துவது என்ற பல சிக்கல்கள் உண்டு. ஆனால் இந்தாண்டு லாபம் தந்த ஹிட்டான படங்களில் ஒன்றாக இருப்பதால் கண்டிப்பாக இந்தப் பட்டியலில் `ஆண்பாவம் பொல்லாதது'க்கும் இடம் உண்டு.
காதல் பற்றி ஒரு இளைஞருக்கு ஏற்படும் புரிதலை மையமாக பேசி இருந்தார் சாரங் தியாகு. கடந்த கால உறவுகளை கையாள்வது பற்றியும், மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது பற்றியும் பேசி கவர்ந்தது `ஆரோமலே'.
சீரியல் கில்லர் ஒருவனின் மனக் குழப்பங்களை படமாக்கினார் மிதுன் பாலாஜி. தானாக முன்வந்து சரணடையும் அவனின் பின் கதை, அதன் மூலம் உண்டாகும் திட்டம் என சுவாரஸ்யமாக இருந்தது `ஸ்டீபன்'.
வருடத்தின் இறுதியில் அசத்தலான படத்தை கொடுத்திருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி. காவல்துறை, நீதித்துறையில் உள்ள சிக்கல்களை அடிப்படையாக கொண்டு ஒரு நிஜ சம்பவத்தை த்ரில்லர் கலந்து கொடுத்திருக்கிறது இந்த `சிறை'.