ஜெயிலர் 2வில் ஷாரூக்கான் நடிக்கிறாரா? பிரபல நடிகர் தந்த தகவல் | Jailer 2 | Shah Rukh Khan | Rajini
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பரபரப்பாக தயாராகிவருகிறது `ஜெயிலர் 2'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்ணா, மிதுன் சக்ரபர்தி, ஆகியோரும் சிறப்பு தோற்றங்களில் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, சுராஜ், வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்தப் படத்தில் ஷாரூக்கான் நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது.
இப்படத்தில் பல நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வந்தபடி இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக எந்த எந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் சில தினங்கள் முன்பு சிவராஜ்குமார் அளித்த பேட்டி ஒன்றில் “ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். சென்ற பாகத்தின் தொடர்ச்சியாக தான் இந்தப் படம் இருக்கும். அதை விட இதில் எனக்கு கொஞ்சம் பெரிய ரோல். ஜனவரி 10க்குள் என்னுடைய படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும்” என பேசி இருந்தார். இதன் மூலம் சிவராஜ்குமார் ஜெயிலர் 2வில் இருப்பது உறுதியானது.
நேற்று பெங்காலி யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரபல நடிகர் மிதுன் சக்ரபர்தி, தான் `ஜெயிலர் 2'வில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அந்தப் பேட்டியில் "இப்போது உங்களுக்கு என்ன மாதிரி கதைகள் பிடித்திருக்கிறது? குடும்ப கதைகளா? அல்லது ஆக்ஷன் கதைகளா?" எனக் கேட்கப்பட்ட போது "இல்லை அதனை அப்படி முடிவு செய்ய முடியாது. என்னுடைய அடுத்த படம் `ஜெயிலர் 2', அதில் எல்லோருக்கும் வில்லன் நான் தான். ரஜினிகாந்த், மோகன்லால், ஷாரூக்கான், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் என அனைத்து பாத்திரங்களும் எனக்கு எதிராகவே இருக்கும்" எனக் கூறியுள்ளார். இதன்படி படத்தில் ஷாரூக்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஷாரூக்கான் நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கிய `ரா 1' படத்தில் ரஜினிகாந்த் எந்திரனில் நடித்த சிட்டி பாத்திரம் இடம்பிடித்தது. இப்போது ரஜினி படத்தில் ஷாரூக் வருகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

