சோமீதரன் இயக்கிய ‘நீளிரா’ படம் புலம்பெயர்தலின் வலியும் போரின் உளவியலையும் ஆழமாக பேசும் பொறுப்பான படமாக பாராட்டப்படுகிறது. இயக்குநர் பாலா, இந்த படத்தை தனது குரு பாலுமகேந்திராவின் நிறைவேறாத ஆசையை நிவர்த்தி செய்த படமாகக் குறிப்பிடுகிறார்.
சோமீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `நீளிரா'. இப்படம் வெளியாகி பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது. பல பிரபலங்களும் இப்படம் பற்றி பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் இயக்குநர் பாலா இப்படம் பற்றிய உரையாடலில் "நந்தா படம் முழுக்க முழுக்க இந்த வலியை மட்டும் பேசிய படம் இல்லை, அதில் சில ஜனரஞ்சகமான விஷயங்களும் இருக்கும். நீங்கள் எடுத்திருப்பது மிகவும் பொறுப்பான படம். அப்படிப் பார்க்கையில் இது எனக்கு குற்ற உணர்ச்சியாக கூட இருக்கிறது. உங்களுடைய சினிமா எனக்கு புனிதமானதாக இருக்கிறது.
பாலுமகேந்திரா சாருக்கு இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததை, அவரது மூத்த சிஷ்யன் என்ற முறையில் அறிவேன். ஆனால் அது அவரால் முடியாமல் போனது. அப்படி யாராவது எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கமும் இருந்தது. அதை ஒரு சிஷ்யனாக நிவர்த்தி செய்திருக்கிறீர்கள் எனும்போது உங்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். புலம்பெயர்தல் என்பது சாதாரண வலி அல்ல. பிறந்த, விளையாண்ட, வளர்ந்த இடத்தை விட்டு, காதலை தொலைத்து நாடுகடந்து செல்வது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.
ஆனால் இப்போது உங்கள் படம் பார்க்கையில் அனுபவிக்கவில்லை என்றாலும், உங்கள் படத்தை பார்த்து கூட புரிந்து கொள்ள முடியும் என தோன்றுகிறது. அந்த வீட்டுக்குள் நடப்பதை காட்டினாலும், அதனை சுற்றி போர் நடந்து கொண்டிருக்கிறது என்ற பயத்தை உண்டு செய்தது. ஒன்றரை மணிநேர படம் என்றாலும், அவ்வளவு நேரமும் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வைத்திருப்பது தான் இயக்குநரின் வெற்றி." எனப் பேசியுள்ளார்.