`அருவி', `வாழ்' படங்களை இயக்கிய அருண்பிரபு அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் `சக்தித் திருமகன்' படத்தை இயக்கினார். செப்டம்பர் 19ம் தேதி வெளியான இப்படம் பரவலான வரவேற்பை பெற்றுவருகிறது. தலைமை செயலகத்தில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் என்ன விஷயம் வேண்டுமானாலும் செய்து கொடுக்கும் ஒரு இடைத்தரகர் போடும் திட்டங்கள் என்ன என்பதை சொல்லி, பல அரசியல் விஷயங்களையும் பேசி இருக்கிறது படம்.
நிகழ்கால அரசியல் சம்பவங்களை பிரதிபலிப்பது போல படத்தில் இடம்பிடித்திருக்கும் பல விஷயங்கள் பாராட்டுக்கள் பெற்றுவருகிறது. சமுக வலைத்தளங்களிலும் இதுபற்றி பலரும் எழுதி வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பு பேட்டி எதுவும் கொடுக்காத இயக்குநர் அருண்பிரபு, இப்போது அளித்திருக்கும் பேட்டியில், இப்படத்திற்கான கரு எப்படி கிடைத்தது என்பதையும், படம் உருவான விதத்தையும் குறித்து பேசியிருக்கிறார். மேலும் இப்படத்தில் முன்பு நடிப்பதாக இருந்தது சிம்பு என்ற விஷயத்தையும் கூறியுள்ளார்.
அதை பற்றி பேசிய அருண்பிரபு "இந்தப் படம் STR செய்திருக்க வேண்டிய படம்தான். ஒரு சில காரணங்களால் செய்ய முடியாமல் போனது. அவருடன் இணைந்து பணியாற்ற ஆசை இருக்கிறது. இந்தப் படத்திற்காக 100 முறை வெவ்வேறு நபர்களிடம் கதை சொல்லி இருப்பேன். அந்த 100 முறையில் மிக, பிளாஸ்ட்டான நரேஷன் அவருடன் நடந்தது தான். முதல் இருக்கை பார்வையாளர் எப்படி ஒரு படத்தை ரசித்து கொண்டாடி பார்ப்பாரோ, அப்படி ஒருவராக கதையை கேட்டு ரசித்தார்." எனக் கூறியுள்ளார்.