இந்திய சினிமாவின் முக்கியமான கலை இயக்குநர் தோட்டா தரணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழி சினிமாக்களில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். குறிப்பாக மணிரத்னத்தின் `பல்லவி அனுபல்லவி' துவங்கி `பொன்னியின் செல்வன்' வரை பல படங்கள், ராம் கோபால் வர்மாவின் `ஷிவா', ஷங்கரின் ஜென்டில்மேன் துவங்கி சிவாஜி எனப் பல முக்கியமான படங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையே.`நாயகன்', `இந்தியன்' படங்களுக்காக தேசிய விருது உட்பட பல மாநில திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார் தோட்டா தரணி. 2001ம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கலை துறையில் இவரது சேவையை பாராட்டி செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலியே விருது என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயரிய விருது. இதற்கு முன்பு சத்யஜித்ரே, சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் நவம்பர் 13ம் தேதி நடக்கும் விழாவில் இவ்விருதை பெறவுள்ளார் தரணி. அன்றைய தினம் தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற உள்ளது.