புரூஸ் லீயின் `Return of the Dragon' படம் தான் `சிவா' - ரகசியத்தை பகிர்ந்த RGV | Shiva | Nagarjuna
நாகார்ஜுனா நடிப்பில் ராம் கோபால் வர்மா இயக்கி 1989ல் வெளியான படம் `சிவா'. இப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, இன்று வரை கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் முகத்தையே மாற்றிய படமாகவும் இடம்பிடித்தது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, `சிவா' படத்தை டிஜிட்டலாக மாற்றி நவம்பர் 14 ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா மற்றும் ராம் கோபால் வர்மா கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இதில் சிவா படத்தின் கதை பற்றியும், அதில் சைக்கிள் செயின் சண்டை பற்றியும் கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.
அந்த சைக்கிள் செயின் யோசனை எப்படி வந்தது?
"நாகார்ஜுனா ஒரு மாணவர் பாத்திரத்தில் வருவார். அவர் படிக்க வருகிறார், யாரையும் அடிக்கவோ சண்டையிடவோ இல்லை. அவருக்கு எதிரில் ஒரு பெண் பிரச்சனைக்கு ஆளாகும் போது, அதை தட்டி கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். அப்படி ஒரு சண்டை ஏற்படுகையில், மற்றவர்கள் ஆயுதங்களுடன் இருப்பார்கள். ஆனால் நாகார்ஜுனா ஆயுதத்துடன் இருப்பவராக இருக்கக் கூடாது. இல்லை என்றால் அவர்களுக்கும் இவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஆனாலும் அவருக்கு ஏதாவது ஆயுதம் வேண்டுமே என யோசித்த போது, அந்த இடத்தில் என்ன ஆயுதம் இருக்கும் என பார்த்தோம். அப்படி அமைந்ததுதான் சைக்கிள் செயின்."
சிவா படத்தின் யோசனை எப்படி வந்தது?
"என் பதின் பருவங்களில் நான் மிகப்பெரிய புரூஸ் லீ ரசிகன். நான் சினிமா வாய்ப்புகளுக்காக அலையும் போது என்னிடம் `ராத்/ராத்திரி' பட கதை மட்டுமே இருந்தது. இந்தப் படத்தை வேறு நடிகர்களோடு செய்வோமா? நாகார்ஜூனா வைத்து எடுப்போமா? அவர் இதில் நடிப்பாரா என கேள்விகள் இருந்தது. சரி நாம் ஏன் நாகார்ஜூனாவுக்கு என ஒரு கதை எழுதக்கூடாது என தோன்றியது. அதற்கு முந்தைய இரவு 15வது முறையாக புரூஸ் லீயின் `Return of the Dragon' பார்த்தேன். அதில் இரு இளைஞன் ஹாங்காங்கில் இருந்து ரோம் வருவார். அங்கு உணவகம் ஒன்றில் பெண்ணுக்கு நடக்கும் அநீதியை தட்டி கேட்பார். அதன் பிறகு பல மோதல்கள் இறுதியாக ஒரு சோலோ ஃபைட் வரும். அந்த ஸ்க்ரிப்ட்டில் உணவகத்துக்கு பதிலாக கல்லூரியை மாற்றி கதையாக எழுதினேன். அதன் ஒன்லைன் ஆடரை 20 நிமிடங்களில் எழுதி முடித்தேன். இதில் நான் செய்தது என்ன என்றால், மார்ஷியல் ஆர்ட்ஸ் விஷயங்களுக்கு பதிலாக, கல்லூரி சம்பந்தமான விஷயங்களை சேர்த்தேன், அவ்வளவு தான்."

