அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள `தீயவர் குலை நடுங்க' படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் "இப்படம் ஒரு உண்மையான சம்பவம் என இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். உதாரணத்திற்கு `அறம்' என்ற நயன்தாரா மேடம் படம், நானும் விஜய் சேதுபதியும் நடித்த `க பெ ரணசிங்கம்' போன்ற படங்களை சொல்லலாம். இதை படமாக எடுக்கையில் பெரிய விழிப்புணர்வை அது தரும். அதன் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி.
இந்த சம்பவம் நிறைய பேருக்கு தெரிய வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் நடித்தேன். அர்ஜுன் சாரை ஜெண்டில்மேனில் பார்த்திருப்போம். ரியல் லைஃபில் உண்மையாகவே அவர் ஜெண்டில்மேன்தான். அவரை போல ஒரு நண்பர் வேண்டும் என அனைவரும் நினைப்போம். அவருடன் இணைத்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் ஒரு ஆக்ஷன் கிங். எனக்கும் படத்தில் சில சண்டைகள் கொடுத்திருக்கிறார்கள். அவர் சண்டைகாட்சிகளில் எனக்கு நிறைய உதவிகளை செய்தார். அதற்கு நன்றி சார். அவருடன் திரையில் வருவது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு அர்ஜுன் சார் தான் ஹீரோ, நான் துணை கதாபாத்திரம் தான்" என்றார்.