இசை உலகில் மிகப் பிரபலமான குழுமம் யுனிவர்சல் மியூசிக் இந்தியா, பாடகர் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சுயாதீன இசை நிறுவனமான அல்பகெர்கி ரெக்கார்ட்ஸுடன் ஒரு பிரத்யேக கூட்டணியை இன்று அறிவித்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம், யுனிவர்சல் மியூசிக் இந்தியாவும் அல்பகெர்கி ரெக்கார்ட்ஸும் இணைந்து, அனிருத் ரவிச்சந்தர் உருவாக்க உள்ள பாப் மற்றும் ஹிப் ஹாப் இசையையும், அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவிருக்கும் எதிர்காலக் கலைஞர்களின் படைப்புகளையும் வெளியிடும். இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக அனிருத் இடம்பெறும் பாடலை ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளனர். இந்த லேபிள் இப்பகுதியைச் சேர்ந்த வளர்ந்துவரும் பாப் மற்றும் ஹிப்-ஹாப் கலைஞர்களின் புகலிடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கூட்டணியைப் பற்றி அனிருத் கூறுகையில், "அல்பகெர்கி ரெக்கார்ட்ஸ் என்பது கலைஞர்களின் ஆதரவுடன் கூடிய, உள்நாட்டிலேயே உருவான ஒரு நிறுவனமாகும். இது சுயாதீன திறமையாளர்களை வளர்த்தெடுப்பதிலும், அவர்களின் இசையை உலக மேடைக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்துகிறது. பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசைத்துறையில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் தலைமைத்துவம், அவர்களை ஓர் இயல்பான கூட்டாளராக மாற்றியுள்ளது. இந்திய சுயாதீன இசையின் அடுத்த அலைக்குத் தலைமை தாங்குவதிலும், அவற்றை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன்" என்றார்.
இந்தியாவின் யுனிவர்சல் மியூசிக் MD சனுஜீத் புஜபல் கூறுகையில், "இசைக்கு அப்பாற்பட்டும் படைப்புத்திறன் மிக்க சூழலை உருவாக்குவதில் அனிருத் நீண்டகாலமாக ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறார். திரைப்படங்களுக்காக எண்ணற்ற வெற்றிப் பாடல்களை வழங்கிய அவரது சிறப்பான சாதனைகளுடன், அவரது படைப்புகளை ஆழமாக ரசிக்கும் பிரம்மாண்டமான ரசிகர் கூட்டத்தையும் அவர் கொண்டுள்ளார்.
அல்பகெர்கி ரெக்கார்ட்ஸ் என்பது பாப் மற்றும் ஹிப்-ஹாப் உலகில் அனிருத்தின் துணிச்சலான கலைப்பார்வையை பிரதிபலிக்கிறது. அவரது புதுமையான முத்திரையைப் போலவே, இந்தக் கூட்டாண்மையும் மற்றொரு மைல்கல்லான படைப்புத் தளத்தை உருவாக்கும் - இம்முறை வளர்ந்து வரும் இந்திய பாப் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட உலகிற்காக இது அமையும்" எனக் கூறியுள்ளார்.