Andrea Jeremiah Mask
கோலிவுட் செய்திகள்

"வீட்டை வைத்து கடன் வாங்கி படம் எடுத்திருக்கிறேன்!" - `மாஸ்க்' ஸ்பெஷல் ஆண்ட்ரியா பேட்டி | Andrea

`பிசாசு 2' வராதது என் திரைப்பயணத்தில் பெரிய வருத்தம். ஆனால் ஒருவிதத்தில் அந்தப் படம் வெளியாகாதது தான், என் படத்திற்கு நானே தயாரிப்பாளர் ஆக காரணம்.

Johnson

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் `மாஸ்க்'. இந்தப் படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா, "மாஸ்க் ஒரு ஹெய்ஸ்ட் படம் தான். அதற்குள் ஜாலியான விஷயங்கள் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு சமூக கருத்தும் படத்தில் இடம்பெற்றிருக்கும். நான் செய்த படங்களில் இது மிக ஜாலியான படம் என சொல்வேன். இந்தப் படத்தின் மூலம் தான் இணை தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறேன்" எனக் கூறியவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


இத்தனை வருடங்களாக பாடகியாக, நடிகையாக பணத்தை வாங்கும் இடத்தில் இருந்தீர்கள். இப்போது தயாரிப்பாளராக பணத்தை கொடுக்கும் இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

"நிறைய பேர் இதை பற்றி கேட்ட போது, உனக்கென்ன பைத்தியமா? வீட்டை வைத்து கடன் வாங்கி இருக்கிறாய் என்றார்கள். ஆனால் அவர்களுக்கு நான் சொன்ன பதில் என்ன என்றால், அந்த வீடு வாங்கியது சினிமாவில் இருந்து வந்த பணத்தில் தான். எனவே அதே பணத்தை தான் திருப்பி சினிமாவில் போட்டிருக்கிறேன். அவ்வளவுதான்"

கவினுடன் படத்தில் நடித்தது எப்படி இருந்தது?

"பிரமாதமாக இருந்தது. முதலில் எனக்கு கவின் பற்றி அவ்வளவு அறிமுகமில்லை. ஆனால் படப்பிடிப்பின் போது அவருடன் பழகியதில் இருந்து எனக்கு தெரிந்தது என்னவென்றால், அவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், ஒரு உதவி இயக்குநராகவும் யோசிக்கிறார். இதற்கு முன்பு நான் கார்த்தியிடம் அதை பார்த்திருக்கிறேன். கார்த்தியும் உதவி இயக்குநராக இருந்தவர். அப்படியான இடத்தில் இருந்து நடிகர்கள் வருகையில், படத்தின் தேவை பற்றி நடிகர்கள் சிந்திப்பார்கள். நிறைய காட்சிகளை கவின் மேம்படுத்தி நடிப்பார். எனக்கும் சில ஆலோசனைகள் கூறி இருக்கிறார். அவை எல்லாம் நன்றாகவும் இருந்தது. எனக்கு அது நல்ல அனுபவமாக இருந்தது. அவரது நடிப்பை பொறுத்தவரை, எனக்கு மிகவும் பிடித்தது. எடிட்டில் படத்தை பார்க்கும் போது, மாறி மாறி உங்கள் நடிப்பு பிடிக்கும் என கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். படம் மொத்தமும் எங்களுக்கு இடையே catch me if you can படம் போல ஒரு சேசிங் இருக்கும்"

Mask

சமீப காலங்களாக ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், Character Artist ரோலில் தான் நடித்திருப்பார் என்பது போல ஒரு எண்ணம் வர ஆரம்பித்துவிட்டது. இப்போது அதிலிருந்து விலகி, இப்போது ஒரு மைய பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"நீங்களே சொல்லுங்கள், வடசென்னை படம் பற்றி சொன்னால் அதன் மையமாக சந்திரா பாத்திரம் என்று தான் மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் தான் Character Artist என சொல்கிறீர்கள். ஆயிரத்தில் ஒருவனில் கூட முக்கிய பாத்திரம் தான். Character Artist என்பதற்கான உங்களுடைய வரையறை எனக்கு புரியவில்லை. ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்தால் அது Character Artistஆ? அது முதன்மை பாத்திரம் இல்லையா? இந்தப் படத்தையே எடுத்துக் கொண்டாலும், ரூஹானி சர்மாதான் கவினின் ஜோடி. எனவே இதில் நான் Character Artist என்பீர்களா? அவரை சொல்வீர்களா?.

மேலும் முதலில் Character Artist என சொல்லவது தவறு. Supporting Artist என்பதே சரி. மலையாள திரையுலகை எடுத்துக் கொண்டால், பல முன்னணி நடிகர்கள் Supporting Role தான் நடிப்பார்கள். ஏனென்றால், எதை பார்க்க வேண்டும்? ரோலை தான் பார்க்கவேண்டும். அவர்கள் அதற்காக விருதுகளும் வாங்குவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் Character Artist என தட்டிவிடும்படி சொல்கிறீர்கள். அது மிக தப்பு. நம்முடை தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் Lead Actors இல்லை, Supporting Actors. பிரகாஷ் ராஜ், ஊர்வசி, மனோரமா அவர்கள் எத்தனை சிறந்த நடிகர்கள். அவர்களை Character Artist என சொல்ல முடியுமா? அவர்கள் எல்லாம் லெஜண்ட். அவர்கள் இல்லாமல் படமே நிற்காது. அவர்கள் Lead Actors இல்லை. ஆனால் அவர்கள் இன்றி படமே நிற்காது. எனவே அதற்கு மதிப்பளித்து பேசுங்கள்"

இந்தப் படம் எடுக்கையில் வெற்றிமாறனிடம் `வடசென்னை 2' பற்றி கேட்பீர்களா?

"நான் இப்போது மாஸ்க் புரமோஷன் சென்றால் கூட சந்திரா சந்திரா என்றுதான் கத்துகிறார்கள். அது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு படம். நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன், நீங்கள் என்ன படம் செய்தாலும் கூட, அவர்கள் அந்த படத்திற்கு தான் காத்திருக்கிறார்கள் என. இப்போது ஒருவழியாக அரசன் என்ற படத்தை வடசென்னை உலகில் செய்கிறார். அது ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுக்கும்"

Chandra

இந்தப் படம் பற்றி வெற்றிமாறனுடன் விவாதித்த அனுபவம் எப்படி இருந்தது?

"முதலில் `அனல் மேலே பனித்துளி' என்ற படத்தை அவரிடம் கொண்டு சென்றேன். அதை அவர் செய்தால் தான் சரியாக இருக்கும் என தோன்றியது. காவல் அதிகாரிகள் செய்யும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய கதை அது. அது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டியது என்பதால், அதை அவரிடம் கொண்டு சென்றேன். ஆனால் அப்போது லாக்டவுன் இருந்ததால் அது ஓடிடியில் வந்தது. அதன் பிறகு கோபி சார், அவருடைய கதையை நேரடியாக வெற்றியிடம் கொண்டு சென்றார். அப்படிதான் அந்த படம் (மனுஷி) என்னிடம் வந்தது. அது சில சென்சார் பிரச்சனைகள் காரணமாக இன்னும் வெளியே வரவில்லை. அது மிகவும் நான் கஷ்டப்பட்டு நடித்த படம். இந்தக் கதை வந்த போது சீரியஸான படங்களே செய்கிறீர்களே, ஒரு ஜாலியான படம் செய்யுங்கள் என சொல்லி `மாஸ்க்' கதையை கொண்டு போனேன். இதில் அவர் இருந்தாலும், அவரது படத்தின் தீவிரத்தன்மை இதில் இருக்காது. அவரும் இதில் பணியாற்றியதை ஜாலியாக தான் செய்திருப்பார். இதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும், அரசன் படத்தில் அதனை பயன்படுத்தப் போவதாகவும் அவரே சொல்லி இருக்கிறார். அது எவ்வளவு உண்மை என பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் நீங்கள் இதில் பணம் போட வேண்டாம், உங்கள் வழிகாட்டுதலே வேண்டும் என வெற்றியிடம்  சொன்னேன். அதுதான் அவரது பெரிய சொத்து என நினைக்கிறேன். பணம் யார் வேண்டுமானால் போடலாம், ஆனால் அவரது அறிவு பங்களிப்பு அவரால் தான் கொடுக்க முடியும். அதனால் தான் அவரை மெண்டார் என கூறினோம்"

Vada Chennai

வொண்டர் வுமன் படத்தை தமிழில் எடுத்தால், தமிழ்நாட்டின் வொண்டர் வுமனாக உங்கள் படம் தான் வருகிறது. உங்களுக்கு அப்படியான படம் நடிக்க யோசனை உள்ளதா?

"யாராவது கதை எழுதினால், கண்டிப்பாக செய்வேன். முதலில் யாராவது எழுத வேண்டும். பின்பு அதில் நடிக்க என்னை அணுக வேண்டும், அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ள வேண்டும். இதெல்லாம் நடந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறேன்?"

பெண்ணை மைய பாத்திரங்களாக கொண்ட படங்களில் நடிப்பதில் ஏன் நீங்கள் கவனம் செலுத்தவில்லை?

"நான் நடித்தேன், வெளியாகவில்லை. `பிசாசு 2', `மனுஷி' எதுவும் வெளியாகவில்லை. `பிசாசு 2' வராதது என் திரைப்பயணத்தில் பெரிய வருத்தம். ஆனால் ஒருவிதத்தில் அந்தப் படம் வெளியாகாதது தான், என் படத்திற்கு நானே தயாரிப்பாளர் ஆக காரணம். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது"

இனியும் தொடர்ந்து படம் தயாரிக்கும் எண்ணம் உள்ளதா?

"முதலில் இது வெளியே வந்து போட்ட பணம் திரும்ப வரட்டும். ஆனால் இதைத் தாண்டி இனி பெண் தயாரிப்பாளர்கள் அதிகம் வர வேண்டும் என நினைக்கிறேன். இது வில்லி பாத்திரமாக இருந்தாலும், அது மிக அழுத்தமாக இருக்கிறது. ஒருவேளை நான் தயாரிப்பாளராக இல்லை என்றால், இதில் எதை எல்லாம் நீக்கி இருப்பார்கள்? கதை எழுதலாம், ஆனால் படம் நினைத்தபடி வருதில் தயாரிப்பாளரும் முக்கிய பங்கு உண்டு"

Ayirathil Oruvan

நீங்கள் நடத்த இயக்குநர்களில், காட்சியின் நேர்த்திக்காக அதிக டேக் வாங்கியது எந்த இயக்குநர்?

"செல்வா தான். ஆயிரத்தில் ஒருவனில் 26 டேக். எதனால் என சரியாக நினைவில்லை. இத்தனைக்கும் அது பெரிய காட்சி எதுவும் இல்லை. நடந்து போவது போன்ற ஒரு சாதாரணமான காட்சி தான். அதற்கு 26 டேக்"

நீங்கள் மென்மையாக நடித்த `பச்சைக்கிளி முத்துச்சரம்' போன்ற படங்களை விட, வடசென்னை போன்ற மாஸ் படம் பேசப்படுவதால். ஆக்ஷன் படம் செய்யும் எண்ணம் உள்ளதா?

"எனக்கு ஆக்ஷன் பண்ண ஆசைதான். ஆனால் ஆக்ஷன் படம் செய்ய பெரிய பட்ஜெட் தேவை. பெண்தான் முதன்மை பாத்திரம் என்றால் கம்மியாக தான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது லோகா வந்து ஹிட்டாகிவிட்டது. புதிதாக சிந்தித்தார்கள் முக்கியமாக ரிஸ்க் எடுத்தார்கள். துல்கர் சல்மான் கிரேட்"

`ஆண்பாவம் பொல்லாதது' படத்தில் 'தரமணில ஆண்ட்ரியா தம் அடித்தால் நீ அடிப்பியா' என ஒரு வசனம் வந்தது, கேள்விப்பட்டீர்களா?

"அப்படியா நிஜமாக வந்ததா (பலமாக சிரிக்கிறார்). அந்தப் படத்தில் எப்படி தம் அடிக்க வேண்டும் என ராம் தான் காட்டினார். நீங்க தப்பா தம் அடிக்கிறீர்கள், நடிப்பது போல தெரியம் என சொல்லிக் கொடுப்பார். அப்போது அவர் பயங்கரமாக தம்மடிப்பார். இப்போது நிறுத்திவிட்டார். அந்த காட்சியை ராம் சார் எழுதியதற்காக காரணம் வேறு. அது அதற்கான தேவையை பூர்த்தி செய்துவிட்டது"

Tharamani

வெற்றிமாறன், செல்வராகவன் போன்ற இயக்குநர்களில் யாருடைய இயக்கத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறீர்கள்?

"எல்லோரும் வெற்றிமாறன் என எதிர்பார்ப்பீர்கள். ஆனால் நான் ராம் என சொல்வேன். வெற்றிமாறன் படத்தை சிறப்பாக எழுதுவார். ஆனால் ராம் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக எழுதுவார். குறிப்பாக பெண் பாத்திரங்கள். அந்த ஆழத்தை எல்லா ஆன் இயக்குநர்களாலும் கொடுக்க முடியாது. என் திரைப்பயணத்தில் நான் மிக ரசித்து நடித்தது, தரமணி மற்றும் பிசாசு 2.

AI நடிகர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறியிருப்பதாக பார்க்கிறீர்களா?

"அது நடிகர்களுக்கு மட்டுமில்லை, மக்கள் அனைவருக்கும் பிரச்னை தான். AI தான் நமக்கு வேலை செய்ய வேண்டுமே தவிர நாம் அதற்கு வேலை செய்யக்கூடாது.

ஆண்ரியா மிக வெளிப்படையான நபர் என்பதால், உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் குறைவாக வருகிறது என நினைக்கிறீர்களா?

"எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் அதெல்லாம் அவர்களின் காரணங்கள் தானே தவிர என்னுடையதல்ல"