"மருதநாயகம் படத்தை மீண்டும்..." - கமல்ஹாசன் பகிர்ந்த தகவல் | Kamalhaasan | Marudhanayagam | Amaran
56வது International Film Festival of India (IFFI) கோவாவில் இன்று துவங்குகிறது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி கமல்ஹாசன் தயாரித்த `அமரன்' படம் Indian Panorama பிரிவில் முதல் படமாக இன்று திரையாகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள படக்குழுவினர் கோவா செல்கிறார்கள். அப்போது விமானம் ஏறும் முன் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.
அந்த சந்திப்பில் பேசிய போது " 'அமரன்' படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையாக தேர்வாகியுள்ளது. அதன் துவக்கவிழா இன்று நடைபெறுகிறது அதற்காக செல்கிறேன். அதற்கான அழைப்பு மத்திய அரசிடமிருந்து வந்தது. அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் எப்படியாக இருந்தாலும், சினிமா, நாடு என வந்துவிட்டால் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும், அதற்கு இது ஒரு பெரிய உதாரணம் என நினைக்கிறேன்.
நாட்டுக்கான படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம், நாடு அதற்கான மரியாதை கொடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு, அது நியாயமானது தானே. இன்னும் தொடர்ந்து நம்முடைய முப்படைகளை பற்றியும் படம் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்போது செல்லும் திரைவிழா உலகத்தரத்தில் உள்ள இந்திய திரைவிழா. அது என்னுடைய சினிமாவுக்கும் என் நாட்டுக்கும் வரும் பெருமை. இதில் தயவு செய்து அரசியலை கலக்க வேண்டாம். அதிலும் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன், ஆனால் அது தனி மேடை. இது நம்முடைய நாட்டை உலகளவில் பிரபல்யப்படுத்தி, பெருமை பேசும் இடம்" என்றவரிடம்,
`உங்களுடன் ரஜினிகாந்த் இணைகிறார், இதில் இசைஞானி இணைய வாய்ப்பிருக்கிறதா?' எனக் கேட்ட போது "அதெல்லாம் அவரும் நானும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும், நான் மட்டும் முடிவு செய்ய முடியாது" என்றார். மேலும் `மருதநாயகம் படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?' என்ற கேள்விக்கு "எனக்கு அதை மறுபடி செய்ய வேண்டும் என ஆசை. தொழில்நுட்பம் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில், அதுவும் சாத்தியம் என்பதுதான் என் நம்பிக்கை" என்றார்.

