நடிகர் ஜெயப்பிரகாஷ் பசங்க திரைப்படம்
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | பாரபட்சமற்ற ஆசிரியர்.. பாசமுள்ள அப்பா.. ‘பசங்க’ ஜெயப்பிரகாஷ்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் தொடரில் ‘பசங்க’ திரைப்படத்தில் ‘ஜெயப்பிரகாஷ்’ ஏற்று நடித்திருந்த ‘சொக்கலிங்கம்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

சிறந்த நடிப்பு என்றாலே அதில் சில துளிகள் மசாலா கலந்து இருந்தால்தான் நம்ம ஊர் ரசனைக்குப் பிடிக்கும். ஒருவர் மிக மிக இயல்பாக நடித்தால் ‘சப்புன்னு இருக்கே’ என்று அந்தத் திறமைகளை பொிதும் கவனிக்க மாட்டார்கள். உண்மையில் இயல்பாக நடிப்பதுதான் ஆகப் பெரிய சவால். நடிப்பு என்பதையே ‘நத்திங் பட் ரியாக்டிங்’ என்கிறார்கள். இந்த வரிசையில், இயல்பாக தன் பங்களிப்பைத் தரும் நடிகராக ஜெயப்பிரகாஷை சொல்லலாம்.

நடிகர் ஜெயப்பிரகாஷ்

ஜெயப்பிரகாஷ் அடிப்படையில் ஒரு சினிமா தயாரிப்பாளர். அதற்கு முன்பாக பல தொழில்களில் ஈடுபட்டவர், சேரனின் ‘மாயக்கண்ணாடி’ என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்காக தலையைக் காட்டினார். முதல் படத்திலேயே அவருக்குள் இருந்த நடிகர் அழுத்தமாக வெளிப்பட்டதின் காரணமாக, பல படங்களில் தொடர்ந்து நடித்து சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக மாறினார். 

ஜெயப்பிரகாஷின் நடிப்பு முதன் முதலில் சிறப்பான முறையில் வெளிப்பட்ட திரைப்படமாக ‘பசங்க’ படத்தை சொல்லாம். ‘சொக்கலிங்கம்’ என்கிற பாத்திரத்தில் ஓர் ஆசிரியராகவும் குடும்பத் தலைவராகவும் இயல்பான நடிப்பைத் தந்து அசத்தியிருந்தார்.

‘நல்லாசிரியராக’ நடித்திருந்த ஜெயப்பிரகாஷ்

ஆசிரியர் சொக்கலிங்கம் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர். அவரது மகனான ஜீவா அதே வகுப்பில் படிக்கிறான். ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அன்புக்கரசு இந்தப் பள்ளிக்கு வந்து புதிதாக சேர்கிறான். தன்னை சண்டியராக நினைத்துக் கொண்டிருக்கும் ஜீவாவிற்கும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் அன்புவிற்கும் விரோதம் ஆரம்பித்து தீராமல் தொடர்கிறது.

பசங்க திரைப்படம்

இந்தப் பகைமை இருவரின் குடும்பத்திற்கு உள்ளேயும் பாய ஆரம்பிக்கிறது. இப்படியொரு சூழலை சொக்கலிங்கம் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் அவரது கேரக்டருக்கான ஸ்கெட்ச். 

குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் என்றாலே அவர்களை பெரிய மனிதத்தன்மையுடனும் செயற்கையாக ‘க்யூட்’னஸ் உடனும் காட்டுவதே பெரும்பாலான சினிமாக்களின் வழக்கமாக இருந்தது. இதற்கு மாறாக பள்ளி மாணவர்களின் இயல்பான வாழ்க்கையை குறும்பு, சண்டை, விரோதம், வெகுளித்தனம் என்று அனைத்தையும் கலந்து தந்த முதல் படைப்பாக ‘பசங்க’ திரைப்படத்தைச் சொல்லலாம். 

பசங்க திரைப்படக்குழு

படத்தின் கதை நடப்பது ‘புதுக்கோட்டை’ மாவட்டத்தின் பின்னணி என்பதால் சம்பந்தப்பட்ட வட்டார வழக்கை சிறப்பாகப் பேசியிருந்தார் ஜெயப்பிரகாஷ். வகுப்பிற்குள் நுழையும் போது, மாணவர்களின் சலசலப்பைக் கேட்டு “சத்த நேரம் கரச்சல் இல்லாம இருக்க மாட்டீங்களாடா.. நீயேன் நெட்டமா நிக்கறே.. உக்கார்” என்று வழக்குத்தன்மையை இயல்பான வசனத்தில் கலந்து பேசி நடித்திருப்பார். 

“கெழவி புருஷன்க எல்லாம் எந்திரிங்க”

ஆங்கிலப் பள்ளியில் பின்பற்றிய நடைமுறைகளை இங்கும் அமல்படுத்த முயல்வான் அன்புக்கரசன். “வகுப்பு ஆரம்பிக்கும் போது உறுதிமொழி ஏற்பாங்க சார்” என்று அவன் சொல்ல, அதைப் பாராட்டும் சொக்கலிங்கம், அதையே இங்கும் பின்பற்ற வைப்பார். ரிப்போர்ட் கார்ட் தரும் போது முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை அவர் பாராட்டி தர “சார். அந்த ஸ்கூல்ல எல்லாம் மத்த பசங்களை கைத்தட்டச் சொல்வாங்க. அப்பத்தானே எல்லோருக்கும் ஊக்கமா இருக்கும்?” என்று அன்பு சொல்ல, எவ்வித ஈகோவும் இல்லாமல் அதையே தானும் பின்பற்றுவார் சொக்கலிங்கம். 

நடிகர் ஜெயப்பிரகாஷ்

அவரது மகனான ஜீவா, படிப்பில் பின்தங்கி சண்டைக்காரனாகவும் வீம்பு பிடித்தவனாகவும் இருக்கும் போது, மகன் என்கிற பாரபட்சம் தராமல் அவனைக் கண்டிப்பதும் தண்டிப்பதும் என்று நடுநிலைமை தவறாத நேர்மையான ஆசிரியராக சொக்கலிங்கத்தின் பாத்திரம் ஒரு முன்னுதாரணமானத்துடன்  படைக்கப்பட்டிருந்தது. “மதிப்பு மசால்வட…பிச்சிப்பார்த்தா ஊச வட.. வாத்தியார் மகன் மக்கு” என்று ஜீவாவை வகுப்பிலேயே கிண்டல் செய்வார் சொக்கலிங்கம்.

“வீட்டுப்பாடம் செய்யாத கிழவி புருஷனுங்க எல்லாம் எந்திரிங்க” என்று இவர் அழைப்பதே அத்தனை சுவாரசியமாக இருக்கும். இப்படி ‘நல்லாசிரியராக’ இருக்கும் சொக்கலிங்கம் நடுநிலைமை தவறும் ஒரு தருணமும் வாய்க்கிறது. 

சிறுவர்களின் பகை பெரியவர்களுக்கும் பரவுதல்

தனது தங்கையை ஜீவா கோஷ்டி அடித்து விட்ட காரணத்தால், பழிக்குப் பழி வாங்குவதற்காக அவனைத் துரத்திச் செல்கிறான் அன்பு. வழியில் சொக்கலிங்கம் எதிர்ப்படுகிறார். “துரத்தி துரத்தி அடிக்கறாங்கப்பா” என்று பொய் அழுகையுடன் ஜீவா புகார் செய்ய, ஒரு கணம் தடுமாறி மகன் மீதுள்ள பாசத்தால் அன்புவின் கன்னத்தில் அறைகிறார் சொக்கலிங்கம். 

நடிகர் ஜெயப்பிரகாஷ்

இது பெரியவர்களுக்கான பகையாக மாறுகிறது. தன் மகனை அடித்த ‘வாத்தி’யுடன் மல்லுக்கட்டுகிறார் அன்புவின் தந்தை. இரண்டு குடும்பமும் எதிரெதிரே நிற்கிறது. அன்புவின் தந்தையை என்ன காரணத்தினாலோ ஆரம்பத்திலிருந்தே வெறுக்கிறார் சொக்கலிங்கம். எனவே அந்தக் கோபம் இப்போது வெளிப்படுகிறது. “நீங்க குடியிருக்கிறது என் பிரெண்டோட வீடுதான். அவன் கிட்ட சொல்லி முதல்ல உங்களைக் காலி பண்ண வைக்கறேன்” என்று சவால் விடுகிறார் சொக்கலிங்கம். “அதையும் பார்ப்போம். இந்த வீட்டையே நான் வாங்கிக் காட்டறேன்” என்று பதில் சவால் விடுகிறார் அன்புவின் தந்தை. 

குடும்பத்திற்குள் பகை ஏற்பட்டு விட்டதால் அந்தக் கோபத்தை ஆசிரியர் வகுப்பில் காட்டுவாரோ என்று அன்பு அச்சப்படுகிறான். அப்படியொரு தோரணையில்தான் சொக்கலிங்கம் வகுப்பில் நுழைகிறார். ‘அன்பு இங்க வா’ என்று மிரட்டும் தொனியில் அழைக்கிறார். நடுங்கிக் கொண்டே செல்கிறான் அன்பு. ஆனால் அப்போது எதிர்பாராத விஷயம் நடக்கிறது. தனது பெயருக்குப் பின்னால் ஐஏஎஸ் என்கிற கனவை பட்டமாக இட்டு வைக்கிறான் அன்பு. அதைப் பார்த்து விட்டு மற்ற மாணவர்களும் தங்களின் கனவுப் படிப்புகளை போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை சொக்கலிங்கம் வகுப்பில் பாராட்ட அன்பு நெகிழ்ந்து விடுகிறான்.

நடிகர் ஜெயப்பிரகாஷ்

‘ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்’ என்று தரப்படும் டாஸ்க்கிலும் சொக்கலிங்கத்தின் மீதுள்ள மதிப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறான் அன்பு. அதை வாசித்து புன்னகைக்கிறார் சொக்கலிங்கம். அதே சமயத்தில் பழிவாங்கும் தொனியில் எழுதியிருக்கும் மகன் ஜீவாவைக் கண்டிக்கிறார்.

சொக்கலிங்கம் செய்யும் நீண்ட உபதேசக் காட்சி

இரு குடும்பத்திற்கும் இடையே இருக்கும் பகை தீர்ந்து போகும் தருணமும் வருகிறது. அன்புவின் தங்கை வீட்டுப்பாடம் எழுதாமல் வந்திருப்பதையொட்டி விசாரிக்கிறார் சொக்கலிங்கம். “நேத்து நைட்டு வீட்ல அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுட்டே இருந்தாங்க சார். அதனாலதான் எழுத முடியல” என்று அந்தச் சிறுமி பரிதாபமாக சொல்ல, அந்தப் பின்னணியை சொக்கலிங்கத்தால் புரிந்து கொள்ள முடிகிறது.

பசங்க திரைப்படம்

என்றாலும் சிறுமியின் பக்கம் உடனே அனுதாபம் காட்டாமல் “வீடுன்னா.. அப்படித்தான் இருக்கும். நாமதான் படிக்கணும்” என்கிற நடைமுறையையும் சேர்த்து சொல்வது சிறப்பானது. 

பிறகு தனது எதிர் வீட்டு பகைமையாளரான அன்புவின் அப்பாவிடம் “உங்க கூட கொஞ்சம் பேசலாமா?” என்று அழைக்கிறார். பிறகு சொக்கலிங்கம் பேசும் நீண்ட வசனங்களும் காட்சிகளும் அந்தப் பாத்திரத்தை முழுமையாக்குகிறது.

நடிகர் ஜெயப்பிரகாஷ்

“அன்பு நல்லாப் படிக்கற பையன். ரொம்ப நல்லா வருவான்” என்று சொக்கலிங்கம் சொல்ல, பெருமிதத்துடன் புன்னகைக்கிறார் அன்புவின் அப்பா. “ஆனா.. அவன் நிறைய டிஸ்டர்ப் ஆகறான்.. நானும் பார்த்துட்டேன். அதுக்கான காரணம் வீடாகவும் இருக்கலாம்” என்று சொக்கலிங்கம் சூசகமாகச் சொல்ல, அன்புவின் அப்பா மனம் திறந்து பேசுகிறார். வசதியாக வாழ விரும்பும் மனைவியின் பணத்தேவையை சமாளிக்க முடியாமல் தினமும் வீட்டில் சண்டை நடக்கிறது.

‘அன்பாலே அழகாகும் வீடு’

அதைப் புரிந்து கொள்ளும் சொக்கலிங்கம், “நானும் அப்படித்தான் மனைவியோட தினமும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன். என் பொண்ணு கொஞ்சம் பெரியவளான பிறகு தினம் நடக்கற சண்டையால தன்னை வருத்திக்க ஆரம்பிச்சா.. அதுல  இருந்து மாறிட்டேன்.

நடிகர் ஜெயப்பிரகாஷ்

விட்டுக் கொடுக்க ஆரம்பிச்சேன். மனைவி கிட்ட சண்டை போடறதில்லை. பொண்ணு என் பக்கம் வந்துட்டா. அதைப் பார்த்துட்டு மனைவியும் இப்பல்லாம் சண்டை போடறதில்லை. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கிட்டா குடும்பம் சந்தோஷமா இருக்கும்ன்றது புரிஞ்சது. நம்ம குழந்தைகளுக்கு நாமதான் முதல் உலகம். அவங்க கனவு நிஜமாவதற்கு கூட நிப்போம்.. இதெல்லாம் என் அனுபவம்தான். உங்களுக்கான உபதேசம் இல்ல” என்று சொக்கலிங்கம் சொல்ல,

“நீங்க என் குரு” என்று நெகிழ்ந்து போகிறார், அன்புவின் அப்பா. 

நடிகர் ஜெயப்பிரகாஷ்

அன்புவின் வீட்டிலும் சண்டை குறைந்து நிம்மதி பரவுகிறது. இதற்கு மூல காரணமாக இருப்பது சொக்கலிங்கம்தான். பாரபட்சமற்ற ஆசிரியராகவும் திருந்திய சராசரி கணவனாகவும் பாசமுள்ள தந்தையாகவும் தனது பாத்திரத்தை இயல்பான நடிப்பால் வெளிப்படுத்திய ஜெயப்பிரகாஷின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது.

இந்த கேரக்டரில் நடித்ததற்காக ‘பிலிம்போ்’ விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றார் ஜெயப்பிரகாஷ்.