தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ். அவர்களது பல படைப்புகளுக்கு காலத்தால் அளிக்க முடியாத பல பாடல்களை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. மூன்று தசாப்தங்களாக இணையாமலிருந்த இக்கூட்டணி இந்தாண்டு மீண்டும் இணைந்துள்ளது.
இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக ’மூன்றாம் பிறை’ (1982), ’தங்க மகன்’ (1983), ’காக்கி சட்டை’ (1985), ’பகல் நிலவு’ (1985), ’காதல் பரிசு’ (1987), ’கிழக்கு வாசல்’ (1990), ’பணக்காரன்’ (1990), ’இதயம்’ (1991) என 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி பல கல்ட் கிளாசிக் படங்களை வழங்கியது. ’ஆனஸ்ட் ராஜ்’ (1994) படத்துக்குப் பிறகு இணையாமலிருந்த T.G.தியாகராஜன் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணி 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்து `லெனின் பாண்டியன்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, திரையுலகில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை ரோஜா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிராமத்துப் பின்னணியில், சமூகத்தில் நிகழும் அவலங்களை நேர்மையாக வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் D.D பாலச்சந்திரன். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.