இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் பல படங்களில் நடித்தவர் துளசி. நடிகை சாவித்ரியின் வேண்டுகோளின் பேரில், அவரது தோழியின் மகளான 3 மாத குழந்தையாக இருந்த துளசியின் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியது. தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் பணியாற்றினார். `சீதாலட்சுமி' மற்றும் `சங்கராபரணம்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக இரண்டு முறை நந்தி விருதைப் பெற்றார்.
90களுக்கு பின்பு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் தமிழில் `மகாநதி', `நல்லவனுக்கு நல்லவன்' மற்றும் `சகலகலா வல்லவன்' போன்ற பல படங்களில் பிரபலமானார். தற்போது பல படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்து கவனம் பெற்று வந்தார். `ஆதலால் காதல் செய்வீர்', `பாண்டியநாடு', `பண்ணையாரும் பத்மினியும்' துவங்கி சமீபத்தில் வெளியான `ஆரோமலே' வரை பல படங்களில் அவர் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள துளசி தற்போது, சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
துளசி வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் "இந்த டிசம்பர் 31 ஆம் தேதி எனது ஷீரடி தரிசனத்திற்கு தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.