கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் `மாஸ்க்'. இந்தப் படம் நவம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வுக்காக மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகள் முன்பு பேசினார் கவின்.
இந்நிகழ்வில் பேசியவர் "பொதுவாக இது போன்ற நிகழ்வுகளுக்கு செல்லும் போது, அங்கு போய் என்ன பேசுவது என யோசிப்பேன். நாம் தன்னம்பிக்கை பேச்சாளர் கிடையாது, படிப்பு சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு சரியாக படிக்காத நாம் செல்கிறோம் அங்கு என்ன பேசுவது என்றெல்லாம் தோன்றும். ஆனால் இப்போது வரும் போது திடீரென தோன்றியது என்ன என்றால், இங்கு எத்தனை பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. 2012ல் எனக்கு பெரிய விபத்து ஒன்று நடந்தது. அது மதுரையில் தான் நடந்தது. ஆனால் அதில் இருந்து பிழைத்து இன்று உங்கள் முன் உயிரோடு நிற்க காரணம் மதுரை மக்கள் தான். சாலை விபத்துகளில் என் நண்பர்களை நான் இழந்திருக்கிறேன். அந்த நேரத்தில் மருத்துவர்கள் சொன்னது, `ஒரு 5 நிமிடம் முன்பு வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்' என்று.
ஆனால் இதற்கு முன்பு நான் செய்ததா இல்லை என் அம்மா அப்பா செய்த புண்ணியமா தெரியவில்லை. மதுரை மக்கள் என்னை எடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் சென்று சேர்த்தார்கள். எனக்கு இப்போதுவரை அவர்கள் யார் என்ன என்று தெரியாது. ஆனால் அந்த 10 - 15 பேர் இல்லை என்றால் இன்று என்ன ஆகி இருக்கும் என தெரியவில்லை. அதன் பிறகு சிகிச்சை எல்லாம் முடிந்து ஒவ்வொரு மருத்துவரும் சரியான வேலையை செய்ததையும் உணர்ந்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நான் சரியாக படிக்கவில்லை. எனக்கு பிடித்ததை செய்ய நினைத்து இங்கு வந்துவிட்டேன். ஆனால் ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். அந்த மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் அண்ணா இல்லை என்றால் என் வாழ்க்கை என்னவாகி இருக்கும் என தெரியவில்லை.
எனவே இதனை முக்கியமாக சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே போதும் என நினைக்கிறேன். இங்கு வரும்போது எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. அது ரொம்ப விலைமதிப்பற்ற விஷயம். கல்லூரி முடித்துவிட்டு நாம் யதார்த்த வாழ்க்கைக்குள் நுழையும் போது, நிறைய பரிட்சைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதை சந்திப்பதிலேயே நேரம் போய்விடும். இன்னொரு முக்கியமான விஷயம் என் நண்பர்கள் எனக்கு கிடைத்த இடம் பள்ளி, கல்லூரி தான். வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் மற்றவை தானாகவே நடக்கும்.
மாஸ்க் நவம்பர் 21 வெளியாகிறது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் கல்லூரி இருக்கும். எனவே எல்லோரும் சமத்தாக வகுப்புக்கு செல்லுங்கள். படிப்பு முடித்துவிட்டு விடுமுறையில் போய் படம் பாருங்கள். அது வெறும் பொழுதுபோக்குத்தான். தேவைப்படும் போது செல்லுங்கள், முடிந்த பின் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு, பொழுதுபோக்காக மட்டும் இருக்கும் வரையில் நல்லது" என்றார்.