கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகியுள்ள படம் `மாஸ்க்'. இந்தப் படத்தின் முதல் நாள் காட்சி முடிந்த பின்பு செய்தியாளர்களை நடிகர் கவினும் இயக்குநர் விகர்ணனனும், தயாரிப்பாளர் சொக்கலிங்கமும் சந்தித்தனர்.
இதில் நடிகர் கவின் பேசிய போது "மாஸ்க் படம் நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர் காட்சியிலும், வெகு ஜனங்களும் கூறியுள்ளனர். இது மக்களுக்கான கதை. நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து மக்களுக்கான கதை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அது சரியாக சென்று சேர்ந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
படத்தின் ஒரு முக்கியமான சண்டைகாட்சியின் திருப்பம் பற்றி கேட்கப்பட "இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணமே கடைசி 20 நிமிடங்கள் தான். இது சாமானியனுக்கான படம், அவர்களின் வலியை பேசும் படம். பத்து பேரை அடிப்பது ஹீரோயிசம் என்றால், நல்லவர்களை காப்பாற்றுவதும் ஹீரோயிசம் தான். அதைத்தான் இந்தப் படத்தில் புதிய விஷயமாக நான் பார்த்தேன்"
வீட்டை அடமானம் வைத்து படத்தை தயாரித்துள்ளதாக ஆண்ட்ரியா சொன்னது பற்றி கேட்கப்பட்ட போது "எங்கள் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா அவரின் வீட்டை அடமானம் வைத்துதான் இந்தப் படத்துக்கான முதலீட்டைச் செய்திருந்தார். படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதனால் அவரின் வீடும் பத்திரமாக இருக்கும் என நம்புகிறோம்" என்றவரிடம்,
நீங்கள் நடப்பதையும் விஜய் நடப்பதையும் சேர்த்து போட்டு அப்படியே இருக்கிறது என்கிறார்களே என்றதும் "அன்று கால் வலி என மெதுவாக நடந்திருப்பேன். யார் யார் வசதிக்கு என்ன தேவையோ அதை சொல்கிறார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்" என்றார் கவின்.
இந்தப் படத்தில் பல இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி கேட்கப்பட்ட போது "அந்தப் பாடல்கள் எல்லாம் இருந்தால் எடிட்டிங்கில் யோசித்து முடிவு செய்தோம். நாங்கள் அந்தப் பாடலை இளையராஜாவிடம் ஆசி பெற்று, அனுமதி பெற்று, என்.ஓ.சி வாங்கிய பின்பே பயன்படுத்தினோம்" என்றார் இயக்குநர் விகர்ணன்.