மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம் PT
கோலிவுட் செய்திகள்

‘மறக்குமா நெஞ்சம்’ குளறுபடி: Refund பணியை தொடங்கியது ACTC!

Jayashree A

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களின் டிக்கெட் நகலுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணத்தை திருப்பி கொடுத்து வருவதாக ட்விட்டர் பக்கத்தில் தகவல்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடக்க வேண்டிய ’மறக்குமா நெஞ்சம்’ எனும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி மழை காரணமாக, தள்ளிவைக்கப்பட்டு, செப்டம்பர் 10 அன்று, சென்னை இசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் பனையூரில் குவிந்தனர். இதனால், இசிஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். அதேவேளை, நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் அங்கு நெரிசலில் சிக்கித்தவித்தனர். உரிய டிக்கெட்டுகள் இருந்தும் பலர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சியை காணவந்த பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

இசை நிகழ்ச்சி அரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இருக்கை வசதியின் எண்ணிக்கையை விட இரு மடங்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில், ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை பகிருமாறு ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தும் துரதிருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழையாதோர் உங்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதிலளிக்கும்' எனப் பதிவிட்டார்.

ar rahman concert

இந்நிலையில், இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ACTC, தனது டிவிட்டர் பக்கத்தில் “அன்பார்ந்த நண்பர்களே, உங்கள் குறைகள் எங்களிடம் வந்து சேர்ந்தது, 3 வலைதளங்கள் வழியாகவும் பணத்தை திருப்பி செலுத்தும் பணியை தொடங்கிவிட்டோம். உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்பும், உங்களின் பொறுமைக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவு செய்திருக்கிறது.