'நானே பலிஆடு ஆகிறேன்..': மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ’மக்கள் விழித்துக்கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்புதிய தலைமுறை

ஆகஸ்ட் மாதம் நடந்திருக்க வேண்டிய ’மறக்குமா நெஞ்சம்’ எனும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி மழை காரணமாக, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தனர். அதன்படி, இந்த நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 10) திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று சென்னை இசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் பனையூரில் குவிந்தனர். இதனால், இசிஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். அதேவேளை, நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் அங்கு நெரிசலில் சிக்கித்தவித்தனர். உரிய டிக்கெட்டுகள் இருந்தும் பலர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இத்துடன் நிகழ்ச்சியை காணவந்த பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சி அரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இருக்கை வசதியின் எண்ணிக்கையை விட இரு மடங்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு உள்பட போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என நிகழ்ச்சியை பார்க்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்கள் அதிருப்தியை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை பகிருமாறு ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தும் துரதிருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழையாதோர் உங்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதிலளிக்கும்' எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர், ’சிலர் என்னை G.O.A.T. (Greatest of all time என்பதன் சுருக்கம்) என்கின்றனர். ஆனால் மக்கள் விழித்துக்கொள்ள நானே sacrificial goat (பலி ஆடு) ஆகிறேன். குழந்தைகள், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார். இத்துடன் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடக்க விரைந்து நல்ல இடம் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ள அவர், ‘இறைவன் நாடினால் நடக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com