யூடியூப் பேட்டியில் டாப்ஸி பன்னு, திரையுலகில் தன்னைப் படங்களில் இருந்து நீக்கிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் ஹீரோவின் கோரிக்கையால் தன்னை மாற்றியதாக கூறப்பட்டதோடு, மற்றொரு படத்தில் ஹீரோவின் மனைவிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதே காரணம் என சொல்லப்பட்டதையும் அவர் அதிர்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.
செய்தியாளர் - M. மீரா
பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு, தான் திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்ட சில சம்பவங்கள் குறித்தும், அதற்காக தனக்கு கூறப்பட்ட காரணங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, ஒரு திரைப்படத்தில் இருந்து தான் மாற்றப்பட்டதற்கு ஹீரோவின் மனைவிக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுதான் தனக்கு சொல்லப்பட்டதிலேயே மிகவும் மோசமான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூடியூபர் நயன்தீப் ரக்ஷித்திடம் அளித்த பேட்டியில், திரையுலகில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை டாப்ஸி பகிர்ந்துகொண்டார். ஒரு திரைப்படத்தில் இருந்து தன்னை நீக்க அந்தப் படத்தின் ஹீரோ விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கான சரியான காரணம் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நான் ஏன் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால், ஹீரோ என்னை படத்தில் வேண்டாம் என்று கூறியதாக மட்டும் என்னிடம் தெரிவித்தனர் என டாப்ஸி கூறியுள்ளார்.
ஆனால் மற்றொரு சந்தர்ப்பத்தில், தனக்கு கூறப்பட்ட காரணம் இன்னும் அதிர்ச்சியாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் மாற்றப்பட்டதற்காக எனக்கு சொல்லப்பட்ட மிக மோசமான காரணம், ஹீரோவின் மனைவிக்கு உங்களைப் பிடிக்கவில்லை’ என்பதுதான். ஏன் அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை என்று டாப்ஸி கூறியுள்ளார்
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஹீரோ அல்லது அவரது மனைவியின் பெயரை அவர் வெளியிடவில்லை.