செய்தியாளர்: V M சுப்பையா
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. அதில், நடிகை சாய் பல்லவியின் தொலைபேசி எண் என ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு எண் திரையில் காண்பிக்கவும்பட்டது.
இந்நிலையில், போரூர் ராமச்சந்திரா கல்லூரியில் பி.டெக் படித்து வரும் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த வாசீகன் என்ற மாணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படத்தில் எனது கைபேசி எண்ணை நடிகை சாய் பல்லவியின் எண்ணாக காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், அக் 31 முதல் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின் குறிப்பிட்ட காட்சியை நிறுத்தி விடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், அந்த காட்சிகள் நீக்கப்படாததால், தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன.
எனது எண்ணை அனைத்து ஆவணங்களுக்கும் இணைத்துள்ளதால் அதனை மாற்ற முடியாது. சினிமாவில் வரும் காட்சிகளால் தனிமனிதர்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை அனுமதி வழங்குவதற்கு முன் தனிக்கைத்துறை உறுதி செய்யவேண்டும்.
அதனால், தீர்ப்பு வரும் வரை அமரன் திரைப்படத்தை திரையிலும், ஒ.டி.டி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும். அமரன் படத்துக்கான தனிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தெரிந்தே கைபேசி எண்ணை பயன்படுத்தி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.