நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம், 6 நாள்களில் 1500 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்தது. எனினும், ரசிகர்களிடம் விமர்சனங்களை அதிகம் சந்தித்தது. அதேநேரத்தில், இந்தப் படத்தின் பிரைம் ஷோவிற்காகச ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்குச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் இதில் பாதிக்கப்பட்டு தற்போது வரை கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே பெண் உயிரிழப்பு தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வரை பரபரப்புக்குள்ளாகி வரும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அதன்படி இன்று ஆஜரானார்.
காலை 11 மணிக்கு, சிக்கட்பல்லி காவல் நிலையத்திற்குச் சென்ற அவரிடம், மதியம் 2.45 மணிவரை விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது அல்லு அர்ஜுனின் தந்தை, திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர். அல்லு அர்ஜுனிடம், காவல்துறை துணை ஆணையர் (மத்திய மண்டலம்) அக்ஷன்ஷ் யாதவ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
அவரிடம், ”உங்களுக்கு பிரீமியருக்கு வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது தெரியுமா, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டபோதும் நீங்கள் அதில் கலந்துகொண்டது ஏன், இதற்கான அனுமதியை உங்களுக்கு அளித்தது யார், வெளியே கூட்ட நெரிசல் குறித்து காவல் துறை அதிகாரிகள் உங்களிடம் தெரிவித்தனரா, அந்தப் பெண்ணின் மரணம் உங்களுக்கு எப்போது தெரிய வந்தது” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தியுள்ளனர். அவரும், காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து பதில் சொன்னதாகக் கூறப்படுகிறது. அவர் அளித்த பதில்களை காவல் துறையினர் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர்.