soori - kamal hasan soori x
சினிமா

தியேட்டரில் அடித்து நொறுக்கும் ’மண்டாடி’.. சூரியை அழைத்து வாழ்த்திய கமல்ஹாசன்!

சூரி நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததை அடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் சூரியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்..

Rishan Vengai

‘மண்டாடி’ வெற்றியை முன்னிட்டு, 100 கோடி வசூல் சாதனை படைத்த சூரி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பை வாழ்வின் மறக்க முடியாத தருணம் என சூரி எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கமலின் நிபந்தனையற்ற அன்பு, வலிமையான வார்த்தைகள், ஆசீர்வாதங்கள் தனது சினிமா பயணத்துக்கு புதிய நம்பிக்கையும் வெளிச்சமும் தந்ததாக சூரி கூறியுள்ளார்.

மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ’மண்டாடி’ திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கை, படகுப்போட்டி, கடல் விளையாட்டு ஆகியவற்றை மையமாகக் கொண்டு வெளியானது. ஜிவி பிரகாஷ் இசை, கேமரா ஒர்க், விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக பெருவாரியான ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடிவருகின்றனர்.

mandaadi

ஸ்போர்ட்ஸ் டிராமாவாக களம்கண்ட மண்டாடி சூரியின் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் திரைப்படமாக மாறியுள்ளது. இதற்குபிறகு சூரியை ‘மண்டாடி சூரி’ என்று அழைத்தாலும் மிகைப்படுத்துவதற்கில்லை. அந்தவகையில் 100 கோடி வசூலை குவித்திருக்கும் படம் மிரட்டி வருகிறது. வசூலை கடந்து விமர்சன ரீதியாகவும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தசூழலில் தான் சூரி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அந்த தருணத்தை சூரி நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனை சந்தித்த தருணம் தனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பதிவில், “என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. கமல் ஹாசன் சார், உங்களின் நிபந்தனையற்ற அன்பு, வலிமையான வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்கள், எங்களது ‘மண்டாடி’ திரைப்படப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அழகான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த மகேந்திரன் அண்ணே மற்றும் டிஸ்னி சகோதரருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள சூரி, “கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும் புதிய வெளிச்சமும். ‘மண்டாடி’ குறித்து அவர் பகிர்ந்த பார்வை வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்” என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனுடனான சந்திப்பு மற்றும் அவரது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட நடிகர் சூரியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.