லோகேஷ் கனகராஜ் pt web
சினிமா

6 படங்களில் 22 ஹீரோக்கள்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்.. வலுக்கும் எதிர்ப்பு!

தாம் தமிழ் சினிமாவுக்கு அதிக பங்களிப்பு செய்திருப்பதாகவும், இயக்கிய 6 படங்களில் 22 ஹீரோக்களை தன் கதைக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

PT WEB

தாம் தமிழ் சினிமாவுக்கு அதிக பங்களிப்பு செய்திருப்பதாகவும், இயக்கிய 6 படங்களில் 22 ஹீரோக்களை தன் கதைக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சினிமாவுக்கு வந்த எட்டே ஆண்டுகளில் எவரும் எளிதில் எட்ட முடியாத புகழ் சிம்மாசனத்தைப் எட்டிப் பிடித்தவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாஸ் ஹீரோக்களுக்கு மாஸ் படங்கள் கொடுத்த எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கரின் வரிசையில், இன்றைய இளைஞர்களின் ஹிட் இயக்குநராக கொண்டாடப்படுவர், லோகேஷ்.

lokesh kanagaraj

இந்திய சினிமாவின் அடையாளங்களான ரஜினிகாந்தையும் - கமல்ஹாசனையும் வைத்து அவர் படம் இயக்க இருப்பதாக பேசப்பட்டது. ’கூலி’ படத்தில் விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், இத்தனை பெரும் வாய்ப்பு மீண்டும் லோகேஷுக்கே கிடைத்ததாகப் பரவிய செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார், நடிகர் ரஜினிகாந்த். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கூறிய பதில், தமிழ் சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களை இணைத்து இயக்கும் வாய்ப்பு, லோகேஷ் கனகராஜின் கைநழுவி போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

’கூலி’ படத்தின் திரைக்கதை அமைப்பு மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த சமயத்தில், கோவையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டார், லோகேஷ். அங்கு பேசிய அவர், தான் தமிழ் சினிமாவுக்கு அதிக பங்களிப்பு செய்திருப்பதாகவும், இயக்கிய 6 படங்களில் 22 ஹீரோக்களை தன் கதைக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார். அவர் பெருமையாகச் சொன்ன இந்தக் கருத்துக்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டங்கள் எழுந்தன. ’இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாசனை விடவா, இவர் சினிமாவுக்கு பங்களிப்பு செய்துவிட்டார்’ என கேள்விகள் எழுப்பபட்டன.

Rajini - Kamal, Lokesh Kanagaraj

’கூலி’ படத்தின் நெகட்டிவ் விமர்சனம், கல்லூரி விழா உரைக்குக் கிடைத்த கண்டங்கள் எல்லாம், ரஜினி-கமல் படம் லோகேஷின் கைநழுவ காரணமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் இல்லை என்றால், ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது, சினிமா.. எது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்... யார் அந்த இயக்குநர் என்பதை அறிய ஆவலோடு இருக்கிறார்கள், ரசிகர்கள்!