சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் web
சினிமா

இந்தி எதிர்ப்பும்; கலைஞர் வசனத்தில் புகழ்பெற்ற பட டைட்டிலும்.. தீயாய் வைரலாகும் SK25 படத்தின் பெயர்!

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் SK படத்தின் பெயர் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

Rishan Vengai

300 கோடிக்கும் மேல் வசூல்செய்த அமரன் போன்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK25 திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ளது.

சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்கவிருக்கின்றனர். படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைக்கவிருப்பதாகவும் பணியாற்றவிருக்கும் நிலையில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இந்நிலையில், இந்தி திணிப்பை எதிர்க்கும் கதையாக சொல்லப்படும் இந்த படத்தின் பெயர் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

கவனம் ஈர்க்கும் படத்தின் பெயர்..

படத்தின் கதையானது இந்தி திணிப்பு எதிர்ப்பை பற்றியது என கூறப்பட்ட நிலையில், படத்தின் அறிவிப்பிலேயே "வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் வைத்து படக்குழு மிரட்டியது.

இந்த சூழலில் 1965-ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், படத்தின் பெயர் ‘பராசக்தி’ என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி என்ற திரைப்படமானது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திரைக்கதையிலும், வசனத்திலும் உருவாக்கப்பட்டு சிவாஜி நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். இந்த படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற வசனமானது கலைஞரின் சிறந்த வசனங்களில் ஒன்றாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெளியாகியிருக்கும் தகவலின் படி, சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் திரைப்படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் தலைப்பு வெளியிட டீசர் தயார்செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த டீசரை சென்சார் குழுவுக்கு படக்குழு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான சான்றிதழும் தற்போது கசிந்துள்ள நிலையில், அதில் தான் படத்தின் பெயர் பராசக்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தி எதிர்ப்புக்கான படத்தின் பெயர் பராசக்தி என வைக்கப்பட்டிருக்கும் நிலையில், படம் நிச்சயம் பெரிய ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் இது உறுதியாகும்.