ரமணியம்மாள்
ரமணியம்மாள் கோப்புப் படம்
சினிமா

”அன்புள்ள ராக்ஸ்டார்! பிரியாவிடை” - உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாடகி ரமணியம்மாள் - பாடகர் ஸ்ரீநிவாஸ் உருக்கம்!

சங்கீதா

ஒரே பாட்டில் பட்டி தொட்டியெங்கும் சென்று சேர்ந்த ரமணியம்மாள்

பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான ரமணியம்மாள், உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். 69 வயதான ரமணியம்மாள், கடந்த 2004-ம் ஆண்டில் வெளியான ‘காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'தண்டட்டி கருப்பாயி' பாடல் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நடைபெறும் குடும்ப விழாக்களில் இன்றளவும் அந்தப் பாடல் இடம் பிடிக்கும் அளவுக்கு, மிகவும் பிரபலமானதற்கு அவரின் தனித்துவமான குரலும் முக்கிய காரணம் என்றுக் கூறலாம்.

ரமணியம்மாள்,

வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் பணிப்பெண் வேலை!

‘காத்தவராயன்’, ‘தெனாவட்டு’, ‘ஹரிதாஸ்’ உள்ளிட்டப் படங்களில் பாடினாலும், பெரிதாக வாய்ப்பு வராததால், வீட்டு பணிப்பெண் வேலைக்கு மீண்டும் திரும்பினார். எனினும், தனது இசை ஆர்வத்தை குறைந்துபோகாமல் இருக்க செய்யும் வகையில், நாட்டுப்புற பாடல்களை பாடியும், வீட்டு விசேஷங்களில் பாடியும் வந்தார் ரமணியம்மாள்.

சின்னத்திரையில் மீண்டும் பிரபலமான ரணியம்மாள்!

தனது 63-வது வயதில் அதாவது, கடந்த 2017-ம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘ச ரி க ம ப சீனியர்ஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் சின்னத்திரை பார்வையாளர்களிடையே பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் தனது பாடல் திறமையாலும், குரல் வளத்தாலும் இரண்டாம் இடம் பிடித்தார் ரமணியம்மாள்.

பின்னர் மீண்டும் திரைத்துறையில், ‘ஜூங்கா’, ‘சண்டைக்கோழி-2’, ‘காப்பான்’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடிய அவர், ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும் பாடி வெளியிட்டிருக்கிறார்.

ரமணியம்மாள்,

மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று பாடியுள்ள ரமணியம்மாள், சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பாடகரும், ‘ச ரி க ம ப சீனியர்ஸ்’ நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவருமான ஸ்ரீநிவாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமணியம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிகழ்ச்சியில் அவருடனான பயணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதில், “மேடையில் மட்டுமல்ல, வெளி உலகத்திலும் உண்மையான ராக்ஸ்டாராகவே விளங்கிய ரமணியம்மா, இப்போது உயிருடன் இல்லை.

மாம்பலம் பகுதியில் உள்ள 7 வீடுகளில் வீட்டு வேலை செய்துவந்தாலும், 63 வயதில் அவர், ‘ச ரி க ம ப சீனியர்ஸ்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கு வந்தபோது, சற்றும் இசை மீதான தீவிரம் குறையாமல் இருந்தார். அதனால் தான் அவர், பார்வையாளர்களால் விரும்பப்படுபவராகவும், ரன்னர் அப் ஆகவும் வந்தார்.

தொகுப்பாளர் அர்ச்சனா, ரமணியம்மாவை ‘ராக்ஸ்டார்’ என்று அழைத்ததற்கு அவரின் அணுகுமுறை மற்றும் ஆளுமையே காரணம். வீட்டு வேலை செய்து சொற்ப ஊதியமே பெற்றாலும், ஒருமுறை ரமணியம்மா, ‘எனக்கு இவ்வளவு போதும் சார்’ என்று சொன்னது நினைவிருக்கிறது. மற்றவர்களாக இருந்தால் இந்தப் பணம் பத்தவில்லை என்றுக் கூறுவார்கள். நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்படுவார். தனக்குப் பிடித்த எம்ஜிஆர்/கண்ணதாசன் பாடல்களைப் பாடி, மேடையையே அதிர வைப்பார்.

சில மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் என்னை அலைபேசியில் அழைத்து, என்னைப் பற்றியும், எனது குடும்பத்தாரை பற்றியும் விசாரிப்பார். அப்போது நான் அவர் நலம் குறித்து விசாரிக்கும்போது, அவருடைய பதில் பொதுவாக, ‘எனக்கு என்ன சார், நான் நல்லா இருக்கேன்; ஜீ தமிழுக்கு நன்றி, மறக்கவே மாட்டேன்’ என்றுக் கூறுவார். கடைசியாக, ஒரு மாதத்திற்கு முன்பு என்னை அவர் அழைத்துப் பேசினார்.

அவருடைய அந்த உற்சாகமான குரலை தற்போது மிஸ் செய்ய நேரிடும். வந்தார், பாடினார், நம்மளை குரலால் வசீகரித்தார், இப்போது உயிரிழந்துவிட்டார். தனது வாழ்க்கையில், இல்லாததைப் பற்றிக் கவலைப்படாமலும், இருப்பதை வைத்து கொண்டாடுபவராகவும் இருந்தவர் ரமணியம்மா... பிரியாவிடை, அன்புள்ள ராக்ஸ்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.