அட்டப்பாடி மது கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு! முழு விவரம்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள், இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Attappady Madhu
Attappady MadhuFile Photo

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சிந்தகி பகுதியைச் சேர்ந்த மல்லன் - மல்லி பழங்குடியின தம்பதியின் மகன் மது (30). இவர், தனது தந்தை இறந்ததையடுத்து, 7-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாலக்காடு சென்று மரவேலைப் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். இதில் பணி காரணமாக ஆலப்புழாவுக்கு ஒருமுறை அவர் சென்றிருந்தபோது, அங்கு ஏற்பட்ட ஒரு தகராறில் மதுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதன்பின் காட்டுப் பகுதிக்கு செல்வதும், குகைகளில் வாழ்வதுமாக இருந்து வந்துள்ளார் மது. சில சமயங்களில் மட்டும் வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார்.

மது, தாக்குதல் சம்பவ தினத்தின்போது
மது, தாக்குதல் சம்பவ தினத்தின்போது

பின்னாட்களில் அவ்வாறு குகையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்த மது, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பலால் திருட்டுப் பழி சுமத்தப்பட்டு, மோசமாக தாக்கப்பட்டார்.

அதன்படி முக்காலி என்ற பகுதியிலுள்ள ஒரு கடையில், தொடர்ந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்களை திருடியதாக அங்கிருந்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் மது.

காட்டுப் பகுதியில் இருந்த குகையில் வசித்துவந்த மதுவை இழுத்துக்கொண்டு வந்து, கட்டிவைத்து அடித்த ஒரு கும்பல், அன்று அவரை கொடூரமாக தாக்கியது. இதனை வீடியோவாகவும் எடுத்து வேடிக்கை பார்த்தனர் அங்கிருந்த சிலர்.

மது
மது

இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அவரை ‘திருடன்’ என்றும் கூறியிருந்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மது, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது வயிற்றில் ஒரு பருக்கை அளவுக்கூட உணவு இல்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், கேரளத்தின் மன்னார்காடு எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இளைஞர் மது கொலை வழக்கில், 3000 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தில் வழக்கு மிகவும் மெதுவாக நடப்பதாக கொலை செய்யப்பட்ட மதுவின் தாயார் மல்லி குற்றம் சாட்டியிருந்தார்.

மதுவின் தாயார் மல்லி
மதுவின் தாயார் மல்லிFile Photo

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில், 14 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் நான்காம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அனீஷ், 11-ம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஏப்ரல் 5) அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது. அதன்படி 12 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், முதல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அனைத்து குற்றவாளிகளுக்கும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது நீதிமன்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com