Diljit Dosanjh, Amitabh Bachchan x page
சினிமா

அமிதாப் கால்களைத் தொட்டு வணங்கிய பஞ்சாப் பாடகர்.. மிரட்டல் விடுத்த காலிஸ்தான் அமைப்பினர்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கிய சீக்கியப் பாடகர் தில்ஜித் தோசன்ஜுக்கு காலிஸ்தான் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Prakash J

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கிய சீக்கியப் பாடகர் தில்ஜித் தோசன்ஜுக்கு காலிஸ்தான் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜை, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மரியாதை நிமித்தமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கினார். இந்தச் செயல், 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை அவமதித்து இருப்பதாக காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,1984 சீக்கியப் படுகொலையின்போது, ’ரத்தத்திற்கு ரத்தம்’ எனக் கூறி வன்முறையாளர்களை அமிதாப் பச்சன் தூண்டியதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், நவம்பர் 1ஆம் நாள் சீக்கிய இனப் படுகொலை நாளில், ஆஸ்திரேலியாவில் தில்ஜித் தோசாஞ்ச் நடத்த உள்ள இசை நிகழ்ச்சிக்கும் எஸ்.எஃப்.ஜே அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

Diljit Dosanjh, Amitabh Bachchan

சர்ச்சை குறித்து இன்னும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்காத பாடகர், தற்போது நவம்பர் மாதம் வரை பல சர்வதேச நிகழ்ச்சிகளுடன் உலக சுற்றுப்பயணத்தில் உள்ளார். இதற்கிடையில், தனது ஆரா சுற்றுப்பயணத்திற்காக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தோஜன்ஜ், சிட்னியில் ஒரு ஸ்டேடியம் நிகழ்ச்சியின் டிக்கெட்டுகளை முழுவதுமாக விற்றுத் தீர்ந்த முதல் இந்திய கலைஞராக வரலாறு படைத்தார். நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன, ஒவ்வொன்றும் 800 டாலர் வரை விற்கப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், அவர் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியபோது இனவெறி கருத்துகளை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 'புதிய உபர் டிரைவர் வந்துவிட்டார்' அல்லது 'புதிய 7/11 ஊழியர் வந்துவிட்டார்' உள்ளிட்ட கருத்துகளை அவர் எதிர்கொண்டார்.

Diljit Dosanjh

இதுகுறித்து அவர், “இந்த இனவெறி கருத்துகளை நான் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால் மக்கள் அதற்கு எதிராகவும் போராடுகிறார்கள், ஏனென்றால், அவர்கள் தங்களுக்கான ஓர் இடத்தை உருவாக்க நிறைய போராடியுள்ளனர். உலகம் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லைகள் இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என்னை ஒரு டாக்ஸி அல்லது லாரி ஓட்டுநருடன் ஒப்பிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. லாரி ஓட்டுநர்கள் இல்லாமல் போனால், உங்கள் வீட்டிற்கு ரொட்டி கிடைக்காது. எனக்கு கோபம் இல்லை, என்னைப் பற்றி அப்படிச் சொல்பவர்கள் உட்பட அனைவருக்கும் என் அன்பு உரித்தாகட்டும்" என இனவெறி கருத்துக்குக் கோபப்படாமல் சாதுர்யமாகப் பதிலளித்துள்ளார்.