இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’தக் லைஃப்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய நடிகர் சிம்பு, "இந்தப் படத்தில் ஒரு வசனம் உள்ளது. ’இனிமேல் இந்த நான்தான் ரங்கராய சக்திவேல்’. அந்த வசனம், வந்தபிறகு சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தை நான் கவனிக்கிறேன். கமல் சார் இடத்தை இவர்தான் பிடிக்கப் போகிறார். இவருக்கு கமல் சார் தன்னிடத்தைக் கொடுக்கிறார் என்பது மாதிரி எல்லாம் பேசி வருகிறீர்கள். நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றைத்தான்.
’தேவர் மகன்’ என்று ஒரு படம் வந்தது. அதில் சிவாஜி சாரும் கமல் சாரும் நடித்திருப்பார்கள். சிவாஜி சாரும் கமல் சாரும் இணைந்து நடித்ததனால் சிவாஜி சார் இடத்தில் கமல் சார் சென்று அமர்ந்து விட்டார் என்று அர்த்தம் கிடையாது. சிவாஜி சார் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். அதேபோல கமல் சாரும் பலவிதமான உழைப்பைக் கொட்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். யார் இடமும் யாருக்கும் சுலபமாகக் கிடைத்து விடாது. அதற்கு, கடினமாக உழைக்க வேண்டும். இந்த வசனத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், கமல் சார் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இனி வரும் தலைமுறையினர் இன்னும் உயரமாக பார்க்கும். ஏனென்றால், அவர்கள் என் தோளில் நின்று பார்க்கிறார்கள். அப்படி, நான் கமல் சாரை ஒரு ஈவினிங் படியாகத்தான் நினைக்கிறேன். உங்களை மிதித்துச் செல்லவில்லை; மதித்துத்தான் செல்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.