விராட் கோலியின் விருப்பமான பாடல் ‘நீ சிங்கம் தான்..’ ஸ்பெஷல் போஸ்ட் போட்ட சிம்பு!
2024 டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு, 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் விராட் கோலி வென்றிருக்கும் நிலையில், 18வது ஐபிஎல் சீசனான 2025 ஐபிஎல் தொடரையும் விராட் கோலி வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
"18th season for number 18" என விராட் கோலி ரசிகர்கள் தெரிவித்துவரும் நிலையில், அதற்கேற்றார் போல் ஆர்சிபி அணியும் நடப்பு தொடரில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் விராட் கோலி தன்னுடைய விருப்பமான பாடலை தெரிவித்துள்ளார்.
நீ சிங்கம் தான்.. விராட் கோலிக்கு போஸ்ட் போட்ட சிம்பு!
ஆர்சிபி தங்களுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், விராட் கோலி தன்னுடைய விருப்பமான பாடலாக நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த பத்துதல படத்தின் ‘நீ சிங்கம் தான்’ பாடலை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் கோலி, ‘சமீபத்தில் நான் அதிகமாக கேட்கும் விருப்ப பாடலை சொன்னால் ஷாக் ஆகிடுவிங்க, என்று கூறி ‘நீ சிங்கம் தான்’ பாடலை பிளே லிஸ்ட்டில் இருந்து எடுத்து காண்பிக்கிறார். ஆர்சிபி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.
விராட் கோலி பேசும் வீடியோவை பகிர்ந்திருக்கும் நடிகர் சிம்பு ‘ நீ சிங்கம் தான் என விராட் கோலியை மென்சன் செய்து’ பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.