Baahubali: The Epic Shobu Yarlagadda
சினிமா

பாடல் நீக்கம், படத்தின் நீளம், பாகுபலி 3... Baahubali The Epic சுவாரஸ்யம் சொன்ன ஷோபு  | Rajamouli

ராணா டகுபதி நடித்த பல்வாள் தேவா பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. அதற்காக ஸ்க்ரிப்டும் அவருக்கு அனுப்பினோம். ஆனால் அதன் பிறகு ராணா முடிவு செய்யப்பட்டிருக்கிறார்.

Johnson

ராஜமௌலி இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `பாகுபலி'. இப்படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பாகுபலியின் இரு பாகங்களையும் இணைத்து Baahubali The Epic என அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளனர். இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பாகுபலி படத்தின் துவக்கம் பற்றி கூறிய ஷோபு "ராஜமௌலி - பிரபாஸ் கூட்டணியில் படத்தை அறிவித்துவிட்டோம். ஆனால் அப்போது படத்தின் கதை முடிவாகவில்லை. குழந்தையை பிடித்தபடி நீரில் மிதந்து வரும் கை, ஷிவுடு கால் கட்டப்பா தலையில் வைப்பது, முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் போன்ற சில காட்சிகள் மட்டுமே ராஜமௌலி மனதில் இருந்தது. அதை வைத்து படத்தின் மீதிக்கதை உருவானது." என்றார்.

Baahubali The Epic உருவாக்கியதற்கான காரணத்தை பற்றி கூறுகையில் "இந்தப் படம் வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது, ஒரு தலைமுறையே கடந்துவிட்டோம். தியேட்டர்களில் இப்படத்தை தவறவிட்டவர்களும் இருக்கலாம். எனவே படத்தின் பத்தாண்டு கொண்டாட்டத்தோடு சேர்த்து, படத்தையும் ரீ ரிலீஸ் செய்யலாம் என யோசித்தோம். சென்ற ஆண்டே இதற்கான யோசனை வந்துவிட்டது. அப்போது இருந்தே திட்டமிட ஆரம்பித்தோம். படத்தை மார்க்கெட் செய்வது, ஐமாக்சில் கொண்டு வருவது எனப் பலவும் இதில் அடக்கம். இன்னும் சொல்லப்போனால் பாகுபலி படம் எடுக்கப்பட்ட போதே ஐமாக்ஸ் வடிவில் படம்பிடித்தோம். ஆனால் வெளியிடும் போது, திரைகள் போதுமான அளவு இல்லை, சில தொழில்நுட்ப விஷயங்கள் காரணமாக ஐமாக்ஸ்ல் வெளியிட முடியவில்லை. ஆனால் பாகுபலி 2 ஐமாக்சில் வெளியிட்டோம். இப்போது Baahubali The Epic ஐமாக்ஸ்லும் வெளியாகிறது." என்றார்.

Baahubali: The Epic

தொடர்ந்து Baahubali The Epicயில் என்னவெல்லாம் இருக்கும், எவை எல்லாம் நீக்கப்பட்டுள்ளது எனக் கூறியவர் "பாகுபலி 1 மற்றும் 2ம் பாகம் அதே வரிசைப்படி தான் இதில் இடம்பெறும். அந்த திரைக்கதையில் எந்த மாற்றமும் இல்லை. சில காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது, `கண்ணா நீ தூங்கடா' போன்ற சில பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது. பாகுபலி முதல் பாகத்தின் முடிவு இடைவேளையாகவும், இரண்டாம் பாகம் Baahubali The Epicன் இரண்டாம் பாதியாகவும் ஓடும். இப்படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 40 நிமிடங்கள். ராஜமௌலிக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், வந்து படத்தை எடிட் செய்தார். பல மாதங்கள் எடிட்டிங் நடைபெற்றது. அதே சமயம் இந்த பதிப்பில் சில சர்ப்ரைஸ்களும் பார்வையாளர்களுக்கு காத்திருக்கிறது. பார்க்காத சில புதிய விஷயங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் முடிவில் பாகுபலி 3 அறிவிப்பு வரும் என சொல்கிறார்களே என்ற கேள்வி முன்வைக்கப்பட, "கண்டிப்பாக பாகுபலி 3 இப்போது இல்லை. அதற்கு நிறைய காலம் தேவைப்படும். ஆனால் மற்ற சில சர்ப்ரைஸ்கள் இருக்கிறது" என்றார்.

பின்பு பாகுபலி சார்ந்த சில ட்ரிவியாக்களை பகிர்ந்தவர் "ராணா டகுபதி நடித்த பல்வாள் தேவா பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. அதற்காக ஸ்க்ரிப்டும் அவருக்கு அனுப்பினோம். ஆனால் அதன் பிறகு ராணா முடிவு செய்யப்பட்டிருக்கிறார். அதே சமயம் பிரபாஸுக்கு பதிலாக ஹ்ரித்திக் ரோஷனை அணுகினோம் என சில வதந்திகள் உள்ளது. அது உண்மையில்லை. ஆரம்பத்தில் இருந்தே பிரபாஸ் தான் பாகுபலி." என்றார்.

பாகுபலி படத்திற்கான ஆவணப்படம் பற்றி கூறிய ஷோபு "பாகுபலிக்காக ஒரு ஆவணப்படம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். அதில் பணியாற்றிய அனைவரும் இடம்பெற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். இது இவ்வருட இறுதியில், ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறோம்." எனக் கூறினார்.