செய்தியாளர் - M.மீரா
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். ‘Being The Salman Khan’ என்ற பெயரில் இந்தச் சேனல் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தச் சேனல் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பிக் பாஸ் 20 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்கில எழுத்துகளான A முதல் Z வரை உச்சரிக்கும் சிறிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, புதிய யூடியூப் சேனல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தனது புதிய முயற்சிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சல்மான் கான், இந்தச் சேனலில் இடம்பெறும் வீடியோக்கள் இப்போதைக்கு பெரியவர்களுக்கானவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எனது யூடியூப் சேனலைப் பார்த்ததற்கு நன்றி. இதில் வரும் வீடியோக்கள் உங்களுக்காக அல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இந்த முயற்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதுடன், அதில் சிறிய குறும்புகளையும் அன்பையும் கலந்து வழங்குவது நல்ல முயற்சியாக இருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் தன்னை நடிகர், கலைஞர், ஓவியர் மற்றும் மனிதநேயவாதி என்று சல்மான் கான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சல்மான் கான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 20-ஆவது சீசனைத் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே, அவர் நடித்துள்ள ‘மாத்ருபூமி’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நயன்தாராவுடன் அவர் நடித்து வரும் புதிய திரைப்படம் 2027-ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின்போது வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.