உலகிலேயே சிறந்த மனிதரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என விவாகரத்து கோரியுள்ள அவரது மனைவி சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார். விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்த அவர், ஏ. ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சில மாதங்களாக மும்பையில் தங்கி இருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் உடனான பிரிவுக்கு அதுவே காரணம். நான் அனைத்து யூடியூபர்கள் மற்றும் தமிழ் ஊடகத்திடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம். அவர் மிகவும் அற்புதமான மனிதர். உலகிலேயே சிறந்த மனிதர் அவர்.
சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாததால் நான் மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து சிறிதுகாலம் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். எனது உடல்நிலை காரணமாகவே இந்த பிரிவு. ஏ.ஆர். ரஹ்மானின் பிசியான நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனது குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
அவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்த அளவுக்கு சிறந்த மனிதர் ஆவார். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் சென்னை திரும்புவேன். ஏ. ஆர்.ரஹ்மான் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.