சாய் சுதர்சன் web
சினிமா

சாய் சுதர்சனுக்கு விலா எலும்பு முறிவு.. ஒரு மாதத்திற்கு கிரிக்கெட் விளையாட முடியாது!

இந்தியாவின் இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

இந்திய அணியின் நம்பிக்கை வீரராக பார்க்கப்படும் சாய் சுதர்சன் விலா எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே தொடரில் காயம் ஏற்பட்டதால், அவர் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாது சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் கவனம் பெற்றார். 45 ஐபிஎல் போட்டிகளில் 2 சதங்கள், 12 அரைசதங்கள் உடன் 50 சராசரியுடன் ஐபிஎல்லில் மிரட்டிய சாய் சுதர்சன், கடந்த 2023 டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக ஒருநாள் அறிமுகத்தை பெற்றார்.

sai sudharsan

ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய 3 போட்டிகளில் 2 அரைசதமடித்து கவனம் ஈர்த்த அவர், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிற்காக டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார். இந்தியாவின் நம்பர் 3 வீரராக பார்க்கப்படும் சாய் சுதர்சன், டெஸ்ட் வடிவத்தில் நம்பிக்கை தரும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

sai sudharsan

தமிழ்நாடு அணிக்காக சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் சதமடித்த சுதர்சன், தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடிவருகிறார். இந்தசூழலில் கடைசியாக நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அகமதாபாத்தில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் ஓடுவதற்கு டைவ் அடிக்கும் போது சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதற்குபிறகு நடைபெற்ற கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

இந்தசூழலில் தான் அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள சிறப்பு மையத்தில் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அது பெரிய அளவிலான இடப்பெயர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. வலைப்பயிற்சியின் போது அவருக்கு அடிபட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் மீதமுள்ள விஜய் ஹசாரே தொடரில் விளையாட முடியாத நிலையுடன், அடுத்த ஒரு மாதத்திற்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.