சாய் பல்லவி - தனுஷ் om movie pre release event @2 x
சினிமா

’விஜய் சார் அரசியலுக்கு போய்ட்டார்.. நீங்களும்’ - தனுஷிடம் கோரிக்கை வைத்த சாய் பல்லவி!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து சாய் பல்லவி பேசியது வைரலாகி வருகிறது.

Rishan Vengai

தனுஷின் அரசியல் வருகை குறித்து சாய் பல்லவியின் கருத்து வைரலாகி வருகிறது. விஜய் அரசியலுக்கு சென்றதை குறிப்பிட்டு, தனுஷ் நடிப்பை தொடர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது, நலத்திட்டப் பணிகளை விரிவுபடுத்துவது, மன்றத்தில் பெண் நிர்வாகிகளை அதிக அளவில் இணைப்பது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

தனது பிறந்தநாளுக்கு முன்பு நடைபெற்ற பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் பேசியது, அவரது அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இருக்கலாம் என்ற விவாதத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியை எப்போது தொடங்குவீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

தனுஷ்

இதற்கிடையே, சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், தனுஷ் ரசிகர் மன்றம் இனி இயக்கமாகச் செயல்படும் என அதன் தலைவர் சுப்பிரமணிய சிவா அறிவித்ததுடன், இயக்கத்தின் லோகோவையும் வெளியிட்டார். 

இந்தசூழலில் தான் சமீபத்தில் நடைபெற்ற ஓம் திரைப்பட விழாவையொட்டி, தனுஷின் ரசிகர்கள் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக கொடிகளுடன் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் ஓம் திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சாய் பல்லவி, "விழாவிற்கு வரும்போது வெளியே கொடிகளைப் பார்த்தேன், ​​என்ன இது ஒரு அரசியல் கூட்டம் போல இருக்கிறதே என்று தோன்றியது. தனுஷ் சார் நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால் விஜய் சார் இப்போதுதான் அரசியலில் நுழைந்துவிட்டு நடிப்பை விட்டுவிட்டார். ஆனால் நீங்கள் தொடர்ந்து நடிக்கவேண்டும். ஏனென்றால், உங்களைப் போன்ற ஒரு யதார்த்தமான மற்றும் சிறந்த நடிகரை நாங்கள் இழக்க விரும்பவில்லை" என்று பேசியுள்ளார்.

தனுஷின் அரசியல் வருகை விஜய்க்கு எதிரானதாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில், சாய் பல்லவியின் பேச்சு வைரலாகி வருகிறது. அதேபோல அவர் பேசும்போது விஜய் என கூறியபோது எழுந்த சத்தத்தையும் விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.