top 10 movies
top 10 movies pt
சினிமா

Rewind 2023: வசூல் மன்னன் யார்? லியோ,ஜெயிலர் முதல் போர் தொழில் வரை-அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்!

யுவபுருஷ்

2023-ம் ஆண்டு முடிய இன்னும் ஒருசில தினங்களே மீதமிருக்கும் நிலையில், ஆண்டின் மொத்த நினைவுகள், நிகழ்வுகளையும் ஒருமுறை நினைவுபடுத்தும் விதமாக 'REWIND 2023' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது புதிய தலைமுறை. அந்த வகையில் இந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் வசூல் ரீதியாக, டாப் 10 இடங்களைப் பிடித்த படங்களைப் பற்றி பேசும் முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு..

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான ரஜினி, அஜித் மற்றும் விஜய் என்று பல்வேறு நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி அதில் சில விருந்தாகவும், சில விஷமாகவும் அமைந்தன. அந்த வகையில், ரஜினியின் ஜெயிலர், அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெளியாகி வசூலை வாரிக்குவித்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து, மாமன்னன், போர்த்தொழில் போன்ற படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன. நடப்பு ஆண்டில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் டாப் 10 படங்களை பார்க்கலாம்.

நம்பர் ஒன் இடத்தில் லியோ.. (சில தகவலின்படி ஜெயிலர்தான் முதலிடத்தில்..)

நடப்பு ஆண்டில் மட்டுமல்லாது தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக ஹைப் ஏற்றப்பட்ட படம் என்றால் அது நடிகர் விஜய்யின் லியோ படத்தைத்தான் சொல்ல முடியும். ஆம், லோகேஷ் - விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த இந்தப் படம் சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாக களமிறங்க, அனிருத் இசையமைக்க, கிளாசிக் பேர் ஆன த்ரிஷா நடிக்க LCU கனெக்ட் என்ற முடிச்சு போட... பெரிதும் ஹைப் ஏற்றப்பட்ட இத்திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டது.

தயாரிப்பாளர் தரப்பின் அறிவிப்பின் படி, 12 நாட்களில் மொத்தமாக 540 கோடி ரூபாயை வசூல் செய்தது லியோ. தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக உலக அளவில் இத்திரைப்படம் சுமார் 620.5 கோடி ரூபாயை வசூல் செய்ததாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். அதிகப்படியான வசூலால், நடப்பு ஆண்டிலேயே அதிக வசூல் எடுத்த திரைப்படமாக மாறியது லியோ.

ரஜினியின் ஜெயிலர் (2ம் இடத்தில் (அ) முதல் இடத்தில்)

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி முத்துவேல் பாண்டியனாகவும், ஜெயிலராகவும் களமிறங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்திய படமாக அமைந்தது ஜெயிலர். இத்திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றத்தில் இருந்த ரஜினி ரசிகக்ரளை குஷியாக்கிய படம் என்றால் அது மிகையல்ல. ஆம், ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா என்று திரைப்பட்டாளமே களமிறங்கிய படத்தை இசையால் தூக்கி நிறுத்தினார் அனிருத். கூடவே வில்லனாக விலையாடியிருந்தார் விநாயகம்.

படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்த நிலையில், வசூலும் எகிறியது. படம் வெளியாகி 16 நாட்கள் முடிவில் மொத்தமாக 525 கோடியை வசூல் செய்ததாக அறிவித்தது தயாரிப்பாளர் தரப்பு. அடுத்ததடுத்த நாட்களில் பெற்ற வசூலின் படி, மொத்தமாக 607 கோடி ரூபாயை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் 2ம் இடத்தை பிடித்துள்ளது ஜெயிலர். ஆனாலும், கடைசியாக வந்த தகவலின்படி ஜெயிலர் உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதனால், முதல் இரண்டு இடங்களை பொறுத்தவரையில் லியோ - ஜெயிலர் இடையே உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இன்றளவும் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவரை உறுதியாக சொல்வது கடினம்.

3ம் இடத்தில் பொன்னியின் செல்வன் - 2!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் படம் சுமார் 500 கோடி ரூபாயை வசூல் செய்தது. முதல் பாகத்தைத் தொடர்ந்து, 2ம் பாகம் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியான படம் கொஞ்சம் ஏமாற்றத்தையே கொடுத்தது. லாபத்தில் நஷ்டம் என்பதுபோல, படத்தின் நேர்மறை விமர்சனங்களில் சற்று சறுக்கல் இருந்தது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனமும் வந்தது. ஆனாலும், வசூல் ஏறவே செய்தது.

ஒட்டுமொத்தமாக படம் 300 கோடியை வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வெற்றிகரமான ஓட்டத்தால் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி ரூபாயை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதன்படி, நடப்பு ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் 3ம் இடத்தைப்பெற்றுள்ளது பொன்னியின் செல்வன் - 2

வாரிசு

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் பொங்கல் விருந்தாக வெளியானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி நடிகராக பார்க்கப்படும் அஜித் குமார் படத்தோடு போட்டியாக வெளியான வாரிசு படம் குடும்ப ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனங்களால் வசூல் பாதிக்கப்பட்டது.

ஒரு பக்கம் வாரிசு தான் வின்னர் என்று படக்குழு அறிவிக்க, நாங்கள்தான் ரியல் வின்னர் என்று போஸ்டர் வெளியிட்டது துணிவு படக்குழு. எது எப்படியோ, உலகம் முழுவதும் சுமார் 300 கோடியை வசூல் செய்ததாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ். தொடர்ந்து படம் 50 நாட்களுக்கு ஓடிய நிலையில் உலகம் முழுவதும் 310 கோடி ரூபாயை படம் வசூலித்ததாக கூறுகிறது புள்ளிவிவரம்.

5ம் இடத்தில் AK-ன் துணிவு

ஹெச்.வினோத் - நடிகர் அஜித் கூட்டணியில் மூன்றாவதாக உருவான துணிவு படம் பொங்கல் விருந்தாக வாரிசுக்கு போட்டியாக களமிறங்கியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர் ஆனால், செகண்ட் ஆஃப் ப்ளேஷ்பேக்கில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அஜித்குமார் கெட்டப் சூப்பர் என்று ரசிகர்கள் கூட்டம் கொண்டாடிய நிலையில், படம் ஒட்டுமொத்தமாக சுமார் 220 கோடியை வசூல் செய்தது. அந்தவகையில், டாப் 10 படங்களின் வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது துணிவு

வாத்தி!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கில் உருவான படம் இரு தரப்பிலும் வரவேற்பை பெற்றது. ஜி.வி பிரகாஷின் இசையில் உருவான வா வாத்தி எனும் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. படத்திற்கு கிடைத்த நேர்மறை விமர்சனங்களால் ஒட்டுமொத்தமாக 118 கோடி ரூபாயை வசூல் செய்ததாக அறிவித்தது படக்குழு.

விஷால் - எஸ்ஜே சூர்யா காம்போவில் ஹிட் ஆன மார்க் ஆண்டனி

விஷால் - எஸ்.ஜே சூர்யா காம்போவில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான டைம் டிரேவல் படமான மார்க் ஆண்டனி பாடல்கள் மற்றும் கெட்டப்புகளால் மெச்சப்பட்டது. டைம் டிராவலில் இது கொஞ்சம் புதுசா இருக்கே என்றபடி ரசிகர்கள் சிலாகிக்க, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவாக எண்ட்ரி கொடுத்த விஷ்ணுபிரியாவையும் கொண்டாடியது ரசிகர் படை. ஆக்‌ஷன், சாங்ஸ், டயலாக்ஸ் என்று கொண்டாடப்பட்ட படம் மொத்தமாக 110 கோடியை வசூல் செய்து டாப் 10 படங்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

மாவீரன்

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான மாவீரன் படமும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தொட்டாலே பெயர்ந்து விழும் அடுக்குமாடி குடியிருப்பு, அமைச்சரின் ஊழல், அப்புறப்படுத்தப்படும் மக்கள், கோழையாக இருந்து மாவீரனாக மாறுவது என்ற அம்சங்களை பேசிய மாவீரன் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் கொஞ்சம் ஸ்லோதான் என்ற விமர்சனம் வந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்த லிஸ்ட்டில் சேர்ந்தது மாவீரன். படம் 75 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தாலும், அடுத்தடுத்த நாட்களின் வசூலாக சுமார் 90 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

மாமன்னனாக உட்கார்ந்த வடிவேலு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன், தமிழக அரசியலில் முன்பு நடந்த நிகழ்வை அப்படியே வெளிச்சம்போட்டு காட்டியது. இது உதயநிதியின் படம் என்பதைவிட வடிவேலுவின் படம் என்றுதான் பலரும் கொண்டாடினர்.

அப்படி ஒரு அருமையான பாத்திரத்தை ஏற்று, அதற்கு நியாயம் செய்து பலரையும் வியக்க வைத்திருந்தார் வடிவேலு. பலராலும் பாராட்டப்பட்ட மாமன்னன், சுமார் 75 கோடி ரூபாயை வசூல் செய்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. டாப் 10 அதிக வசூலை அள்ளிய படங்களின் வரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளது மாமன்னன்.

10 இடத்தைப் பிடித்த போர் தொழில்!

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அஷோக் செல்வன் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியான போர் தொழில் எதிர்பாராமல் வெளியாகி ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. அடுத்து என்ன அடுத்து என்ன என்று சஸ்பென்ஸ் வைத்து ரசிகர்களை கட்டிப்போட்ட படமாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஒவ்வொரு கேரக்டரையும் அழுத்தமாக எழுதிய விதத்தை ரசிகர் பட்டாளம் கொண்டாடி தீர்த்தது. படம் பெற்ற நேர்மறை விமர்சனங்களால் நடப்பு ஆண்டில் அதிக வசூல் பெற்ற டாப் 10 படங்களில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது போர் தொழில்.

இந்த தகவல்கள் அனைத்தும் படங்களின் தயாரிப்பாளர் தரப்பு கொடுத்த அதிகாரபூர்வ தகவல்கள் மற்றும் அதன்பிறகு கசிந்த தகவல்களை ஒப்பிட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.