ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' உருவாக்கம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்தார். சீக்குவல்களுக்கு எதிராக இருந்தாலும், நெல்சனின் கதை மற்றும் படத்தின் வெற்றியை முன்னிட்டு 'ஜெயிலர் 2' உருவாக்கம் நடந்தது. படத்தில் கவுண்டமணி, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா போன்ற பல முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர்.
ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார் ரஜினிகாந்த். அதில் பேசிய போது "வழக்கமாக பிரம்மாண்ட அரங்கில் ஆடியோ லான்ச் செய்வோம். அது மிகவும் ரொட்டீன் ஆக இருக்கிறது, வித்தியாசமாக செய்யலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. கண்டிப்பாக ஆடியன்ஸை நேரடியாக சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது. வரும் காலத்தில் இதை எல்லாம் நாம் சரி செய்துவிடலாம்." என்றார்.
ஜெயிலர் 2 உருவான விதம் பற்றி பேசியவர் "நான் பொதுவாக சீக்குவலுக்கு ஆதரவாக இருக்க மாட்டேன். ஏனென்றால் சீக்குவல் என சொன்னாலே சரக்கு கம்மி ஆகிவிட்டது, கிரியேட்டிவிட்டி கம்மி ஆகி விட்டது. ஏற்கெனவே செய்ததில் உப்பு காரம் சேர்த்து மறுபடியும் செய்வார்கள் என்ற எண்ணம் எனக்கு. அதனாலேயே பாட்சா 2 படத்தை நிறைய முறை சத்யா மூவிஸ் கேட்டும் செய்யவில்லை. பாட்சா இப்போது வனவாசம் மாதிரி மறைவாக வாழ்ந்து வருவான். எப்போது அவன் உயிரோடு இருப்பது வெளியே தெரிகிறதோ, ஒரு பக்கம் எதிரிகள், மறுபக்கம் போலீஸ் துரத்துகிறார்கள் என RMV சாரே ஒரு நல்ல திரைக்கதை எழுதினார். ஆனால் எனக்கு அதை பண்ண விருப்பமில்லை. பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் செய்ய கூட கார்த்திக் சுப்புராஜ் ஒரு ஐடியாவோடு வந்தார். விஜய் சேதுபதி என்னை பழிவாங்க வருவது போல கதையை அமைத்திருந்தார். ஆனாலும் செய்யவில்லை.
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி வெற்றியான பின்னர் நான் ஓடிடியில் மறுபடி பார்த்தேன். நெல்சன் அவருக்கு தெரியாமலே படத்தில் சில இடங்களில் வர்மா பாத்திரம், அவருக்கு பின்னால் பெரிய குரூப் இருக்கிறது என சொல்லும்படி வைத்திருப்பார். வர்மனே பயப்படுகிறார் என்றால், அது எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமாக இருக்கும் என்பது தானாக கதையில் வந்துவிட்டது. இன்னொரு பாயிண்ட், ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் கொண்ட கன்டெய்னரை ஜெயிலர் கைப்பற்றி வைத்திருக்கிறார். அந்த குரூப் எப்படி விடுவார்கள்? கதை மிக தெளிவாக இருக்கிறது. ஜெயிலர் பாத்திரத்தையும் மிக நேர்த்தியாக, வலிமையாக வடிவமைத்திருந்தார் நெல்சன். இன்னொன்று என்னுடைய 70+ வயதுக்கு ஏற்ற மாதிரி பாத்திரம்.
ஜெயிலர் வெற்றி அடைந்த பின், நெல்சனை பல நடிகர்கள் அழைத்தனர். ஒரு பெரிய ஹீரோ உடன் படம் கூட செய்வதாக பேசி இருந்தார். ஆனால் நெல்சனுக்கு, பேராசை கிடையாது. மிகவும் புத்திசாலி, மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர். இப்போது 18வது மாடியில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார். எனக்கே பொறாமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நல்ல சம்பளம் கொடுத்துவிட்டார். கூடவே அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நல்ல சாப்பாடு, மால் போவது... எதையும் வாங்காமல் சுத்தி பார்ப்பது இதுதான் அவர் வேலையே.
அப்போது தான் நெல்சன் சாரை நான் அழைத்து ஜெயிலர் பார்ட் 2 பண்ணலாம் என சொன்னேன். அதை பிழிந்துவிட்டோமே சார் என மறுத்தார். நானும் அடுத்தடுத்த படங்களுக்கு போய்விட்டேன். மறுபடி ஒரு மாதம் கழித்து அவர் என்னை அழைத்து சந்திக்க வேண்டும் என்றார். வந்து ஜெயிலர் 2 ஐடியா நன்றாக இருக்கும் என்றால். ஆனால் கொஞ்சம் டைம் கேட்டார். எனக்கும் நிறைய படங்கள் முடிக்க வேண்டி இருந்தது. அதில் நன்றாக நேரம் எடுத்துக் கொண்டு, கதை எழுதினார். அதுதான் இந்த ஜெயிலர் 2. அதை அவர் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கிறார். முதல் பாகத்தை மீறி இது இருக்க வேண்டும் என பெரிய சவால் இருந்தது. அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
இதில் ஒரு பாத்திரம் வருகிறது, அதை வெளியே சொல்ல கூடாது என சொல்லி இருக்கிறார்கள். கவுண்டமணி உடன் நடித்தால் என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது, அப்படியான ஒரு நடிகர் இதில் இருக்கிறார், அவரோடு சிரித்து ரசித்து நடித்திருக்கிறேன். வர்மாவுக்கு கொஞ்சமும் குறையாமல் சூராஜ் பாத்திரம் இருக்கும், வித்யா பாலன் மிகவும் அழகான திறமையான நடிகை. அவருடன் தனி படமே நடிக்க வேண்டும். மிதுன் சக்கரவர்த்தியிடம் நடிக்க கேட்ட போது, முதலில் மறுத்து விட்டார். பின்னர் நான் ஒருமுறை நேரில் சந்தித்த போது என்னிடம் மறுத்ததை சொன்னார்.
ஆனால் நீ என்னை அடிக்க கூடாது, சுடக்கூடாது ஓகேவா என கண்டிஷன் போட்டார். சரி என சொல்லி அவரை உள்ளே கொண்டு வந்தோம். அதன் பிறகு இன்னொரு மெய்ன் பாத்திரம் ,நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா. ஒன்மோர் கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் உட்காரவும் மாட்டார். அவர் நடிக்கும் வரை நாங்களும் நிற்போம். 70 + ஆகிவிட்டது என்னையாவது உட்கார சொல்லி இருக்கலாம்.
பின்னர் ரம்யா கிருஷணன். அவர் நாளுக்கு நாள் அழகாகி கொண்டே போகிறார். முதல் பாகத்தில் யோகி பாபுவுக்கு சின்ன ரோல் தான். ஆனால் இதில் நிறைய காட்சி வருவார். நமோ நாராயணாவுக்கு மிகவும் முக்கியமான ரோல், படத்தில் ரசிப்பீர்கள். இனி அவரை பிடிக்கவே முடியாது. இதில் ஒரே மிஸ்ஸிங் தமன்னா தான். இரண்டு பாடல் இருந்தது, அதில் தமன்னாவை ஆட வைக்கலாம் சார் என்றேன். ஆனால் உங்களுக்கு பிடிக்கும் என்று எல்லாம் வைக்க முடியாது என நெல்சன் சொல்லிவிட்டார்.
இதில் டென்ஷனே அனிருத் தான். அவர் கான்சர்ட், பாரடைஸ் படம் என பிஸியானார். அவர் இந்தப் படத்தை முடிப்பாரா என டென்ஷானாக இருந்தோம். ஆனால் அவரது அப்பா ரவி சொன்னார், அனி டென்சனில் தான் நல்ல பாடல்களை போடுவார் என. அப்படி சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கிறார்.
76 வயதாகிவிட்டது இன்னும் ஹீரோவாகவே நடிக்கிறீர்களே எனக் கேட்கிறார்கள். அதற்கு ஒரே காரணம், என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் ரசிகர்கள் தான்."
அவர் பேசி முடித்த பின்னர் நெல்சன் ரஜினியிடம் ஒரு குட்டி Q&A செஷன் நடத்தினார் அதில் "எப்படி களைப்பே இல்லாமல் 50 ஆண்டுகள் இந்த துறையில் இருக்க முடிகிறது?" எனக் கேட்க,"நாம் செய்யும் வேலையை நாம் விரும்ப வேண்டும். அதை விரும்பினால் தன்னாலேயே ஈடுபாடு வந்துவிடும். வேலையை வேலையாக நினைக்காமல் விளையாட்டு போல நினைத்து செய்ய வேண்டும். விளையாடும் போது நமக்கு சோர்வே வராது. அப்படி சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். பிடித்த வேலையை செய்தால் சிரமமே இருக்காது." என்றார்
இயக்குநரையும் விட ஒரு படத்தில் மிகவும் அர்ப்பணிப்போடு இருந்து, அதை பற்றியே சிந்திக்கிறீர்கள். எப்படி இந்த குணம்?" என்ற கேள்விக்கு
"ஒரு படத்தை ஒப்புக் கொண்டால் அதிலேயே நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நான் கமல் எல்லாம் கேபி சார் ஸ்கூலில் இருந்து வந்ததால் அந்த பயிற்சி இருக்கிறது. நான் ஏதாவது தப்பு செய்தால் அவர் கேள்வி கேட்பார். நீ யோசிக்க மாட்டாயா என திட்டுவார். அதை பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என சொல்வார். அதைத்தான் நான் செய்கிறேன்" என்றார்.
"நீங்கள் எப்படி நேர்மறை உணர்வுகளோடே இருக்கிறீர்கள்?" என்றதும் "நாம் என்ன நினைத்தாலும் முதலில் சிந்தனையில் இருந்துதான் வரும். அதனை பாசிட்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவரை பற்றி கெட்டதாக சிந்தித்தால் முதலில் அது உங்களை பாதிக்கும். பாசிட்டிவோ, நெகட்டிவோ எப்படி சிந்தித்தாலும் 24 மணிநேரம் தான். அதற்கு பாசிட்டிவாகவே சிந்திக்கலாமே. இப்போது இருக்கும் நெகட்டிவ் உலகத்தில் இது மகிழ்ச்சியை கொடுக்கும்." என்றார்.
"எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்?" என்றார் நெல்சன் "முதலில் நான் நடிகர் என்பதை விரும்புகிறேன். ஆனால் அதைவிட பேருந்து நடத்துநர் வேலையை விரும்பினேன். அந்த ஐந்தாண்டு பணி அனுபவத்தை இப்போதும் மிஸ் செய்கிறேன். நான் ஒரு நடிகர், ஸ்டார் என்பதெல்லாம் இருந்தாலும், முதலில் நான் ஒரு நடத்துநர் என்பது எனக்குள் ஆழமாக ஊறிவிட்டது. எனவே ரஜினிகாந்த், சூப்பர்ஸ்டார் என்பதை எல்லாம் என்னோடு பொருத்திக் கொள்ளவே முடியவில்லை. இப்போதும் என்னை ஒரு பேருந்து நடத்துநராகவே நினைத்துக் கொள்கிறேன். எனவே பேருந்து நடத்துநர் உங்களை போன்ற பெரிய மனிதர்களிடம் தன்மையாக தானே நடந்து கொள்வார்." என ரஜினி பதில் சொல்ல மொத்த கூட்டமும் கைதட்டி பாராட்டியது.