`கேம் சேஞ்சர்' படத்திற்கு பிறகு ராம் சரண் நடிக்கும் படம் `பெத்தி'. `உப்பெனா' படம் மூலம் கவனம் ஈர்த்த புஜ்ஜி பாபு சனா இயக்கிவரும் இப்படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது.
தற்போது வரை 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் இலங்கையில் துவங்குகிறது. இலங்கை தீவுகளில் பல இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் பங்குபெறும், ஒரு பாடல் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையைமைக்கிறார்.
இப்படத்தின் கதை 80களில் நடப்பது போல் உருவாகிறது. கிரிக்கெட்டை பயன்படுத்தி, பலம் வாய்ந்த ஆட்களிடமிருந்து தன் மக்களை காக்க போராடும் பாத்திரத்தில் நடிக்கிறார் ராம் சரண். இதுவரை காணாத புதிய தோற்றங்களிலும் பல்வேறு வித்தியாசமான லுக்கிலும் ராம் சரணை காட்ட உள்ளது பெத்தி.
இப்படத்தில் சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். R ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார். “பெத்தி” படம் வரும் 2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.