ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், திவ்யந்து, ஜெகபதிபாபு, பொம்மன் இராணி எனப் பலரும் நடித்துள்ள படம் `பெத்தி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய ராம் சரண், "கடந்த இரண்டு ஆண்டுகள் மிக அபாரமானவை. இந்த படம் எங்கள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. இதில் வாழ்ந்து, சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். புச்சி பாபு இந்தக் கதையுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். மேலும், இந்தப் படத்திற்கு ரஹ்மான் சாரை இசையமைக்க சம்மதிக்க வைத்ததற்கு அவருக்கு நன்றி.
ஒவ்வொரு படத்துக்கும் நான்கைந்து தூண்கள் இருக்கும். ஆனால் இவர் படத்தின் மையமான தூண் ரஹ்மான் சார்தான். அவர் இப்படியான பல படங்களில் பணியாற்றியுள்ளார். அவரின் Pele படத்தின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இப்படத்தின் ஒரு பாகமாக இருப்பது பெருமை. ஜான்வி அளவுக்கு சிறப்பான நடிகையை நான் பார்த்ததில்லை. அவர் கடினமான உழைப்பாளி. கடைசிப் பாடலுக்கு அவர் கடினமாகப் பயிற்சி செய்தார். தொடர்ந்து 85 நாட்கள் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் பாடல் வந்தது. அப்போது ஜான்வி ஆடியதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அவர் என்னைவிட 100 மடங்கு சிறப்பாக ஆடினார். அவர் அமைதியாக மும்பையில் பயிற்சி செய்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்தது. என் தந்தையும், ஸ்ரீதேவி மேடமும் பல படங்களில் பணிபுரிந்துள்ளனர். நாங்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நெடுநாள் விருப்பம். இந்த ஜோடி, உங்களை ஏமாற்றாது என நம்புகிறேன். இப்படியான ஒரு படத்தை உருவாக்க பாதை போட்டுக் கொடுத்த அமீர்கான், சல்மான் கானுக்கு நன்றி. உங்களின் `டங்கல்', `சுல்தான்' படம் எங்களுக்கு பெரிய உத்வேகம் தந்தது" என்றார்.