செய்தியாளர் - M. மீரா
நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் தொடர்பாக தற்போது மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தைp பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சூரியை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மீனவ சமூகத்தின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் நடைபெறும் படகுப்போட்டியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியைச் சுற்றி உருவாகும் உறவுகள், உணர்வுகள் மற்றும் மோதல்களும் திரைக்கதையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடம் பிரபலமான சூரி, ‘விடுதலை’ திரைப்படத்திற்குப் பிறகு கதாநாயகனாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ‘மண்டாடி’ திரைப்படமும் அவரது நடிப்பை மையப்படுத்திய படமாக அமைந்துள்ளது. இந்நிலையில், படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் சூரிக்கு போன் செய்து, படம் மற்றும் அவரது நடிப்பு குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் ரஜினிகாந்திடம் இருந்து வந்த இந்த அழைப்பு சூரியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சூரி, ரஜினிகாந்தின் பாராட்டு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்தின் குரலை நேரடியாக தொலைபேசியில் கேட்டுப் பேசிய அந்த தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.