\
Rashmika-Gautham-Anirudh Joins MS Subbulakshmi Biopic
Rashmika Mandana & M. S. SubbulakshmiANI

ராஷ்மிகா - கௌதம் - அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் என்பதால், இசை இந்தக் கதையின் மிக முக்கியமான அங்கமாக இருக்கும். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
Published on

இந்திய இசை உலகின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ‘ஜெர்ஸி’, ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌதம் தின்னனூரி இந்தப் படத்தை இயக்குகிறார். சில மாதங்களாக இந்த பயோபிக் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் சாய் பல்லவி, பின்னர் ருக்மிணி வசந்த் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகத் தேர்வாகியுள்ளதாகவும், அவருக்கான லுக் டெஸ்ட் நடைபெற்றதாகவும் செய்திகள் பரவின.

Rashmika Mandana
Rashmika MandanaANi

எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற இசை மேதையின் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது மிகப்பெரிய சவாலானது. அவரது தோற்றம், உடல்மொழி, மேடைப் பிரசன்னம் மட்டுமின்றி, கர்நாடக இசையின் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இதற்காக ராஷ்மிகா சிறப்புப் பயிற்சி பெற இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் மற்றொரு முக்கியப் பலமாக கௌதம் தின்னனூரி – அனிருத் கூட்டணி பார்க்கப்படுகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் என்பதால், இசை இந்தக் கதையின் மிக முக்கியமான அங்கமாக இருக்கும். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாள் என்பதால் நாளை (செப்டம்பர் 16) வெளியிட உள்ளனர். அதே நாளில் படத்தை பிரம்மாண்டமாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருக்கிறார்.

அல்லு அரவிந்த், பன்னி வாசு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் தலைப்பு, முழுமையான நடிகர்கள் பட்டியல் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள், கூடவே படம் எந்தெந்த மொழிகளில் உருவாகிறது போன்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் நாளைய நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு, கௌதம் தின்னனூரியின் இயக்கம், அனிருத்தின் இசை என சுவாரஸ்யமான கூட்டணியை உருவாக்கியுள்ள இந்தப் படம், நாளை எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினால், இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் முக்கியமான பயோபிக்குகளில் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Rashmika-Gautham-Anirudh Joins MS Subbulakshmi Biopic
கேரளாவில் அதிக வசூல் | ‘லோகா’ சாதனையை முறியடித்த ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com