மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இத்திரைப்படம் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட கதைப்பொருளாக உருவாக்கப்பட்டிருந்தது. இதில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜுன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா 1 திரைப்படம் வசூலிலும் ரூ.390கோடி வரை வசூல்செய்து அசத்தியது. இதனால் புஷ்பா 1 திரைப்படத்தின் தொடர்ச்சியாக ”புஷ்பா 2 தி ரூல்” இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி உலகளவில் வெளியான நிலையில், 4 நாளில் 800 கோடி வசூலை கடந்து வரலாறு படைத்துள்ளது.
முதல் பாகத்தை பொறுத்தவரையில் அல்லு அர்ஜுன், ஃப்ஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உடன் ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் உள்ளிட்ட பலபேர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார்.
மாபெரும் வரவேற்பைப் பெற்ற முதல் பாகம் வசூலில் ரூ.390 கோடிவரை வசூலை ஈட்டியிருந்த நிலையில், புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகமானது வெளியான 4 நாட்களிலேயே அதன் முதல் பாகத்தின் வசூலை விட இரண்டு மடங்கு வசூலை ஈட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் 4 நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், புஷ்பா 2 தி ரூல் படம் நான்கே நாளில் உலகளவில் ரூ.829 கோடி வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிவேகமாக 800 கோடி என்ற மைல்கல் வசூலை எட்டிய முதல் இந்திய திரைப்படம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐந்தாம் நாள் அல்லது முதல் வாரத்திற்குள் ஆயிரம் கோடி என்ற மைல்கல்லை புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.