மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.
உடன் ஃப்ஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் என பலர் நடித்திருந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ஹிட்டடித்து.
மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படம் வசூலில் ரூ.390 கோடிவரை ஈட்டி பட்டையை கிளப்பிய நிலையில், அதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் வெளிவந்துள்ளது.
புஷ்பா 1 திரைப்படத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் அதிகப்படியான வரவேற்பை சினிமா ரசிகர்கள் வழங்கியுள்ள நிலையில், படம் வெளியான 11 நாட்களில் உலகளவில் 1409 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. நிறைய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டப் போதும், பல சிக்கலில் அல்லு அர்ஜுன் மாட்டியபோதும் வசூலில் மட்டும் மந்தமே இல்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது புஷ்பா 2.
அல்லு அர்ஜுன் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படமானது கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படமாக மாறி வசூல் சாதனை படைத்தது.
அதுமட்டுமல்லாமல் ஆறு நாளில் ஆயிரம் கோடி வசூலை கடந்து அதிவேகமாக 1000 கோடி வசூலை ஈட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் 11 நாளில் 1,409 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும், நடப்பு 2024 ஆண்டின் அதிகப்படியான வசூலை கடந்த இந்திய படமாகவும் மாறி பிரபாஸின் கல்கி திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது புஷ்பா 2. இந்த அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உடன் ஹிந்தியில் அதிக வசூல் செய்த பாகுபலி 2 வசூலையும் முறியடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரையான வசூலில் மட்டுமே உலகளவில் 1409 கோடியை கடந்திருக்கும் புஷ்பா 2, RRR மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளி, உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் தங்கல் மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் நீடிக்கின்றன. தங்கல் வசூல் சாதனையை முறியடிப்பது கடினமானதாக இருந்தாலும், நிச்சயம் பாகுபலி 2 வசூல் சாதனையை புஷ்பா 2 முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.