"தி சபர்மதி ரிப்போர்ட்" படத்தை பார்த்து பிரதமர் மோடி கண் கலங்கியதாக, அப்படத்தின் கதாநாயகன் தெரிவித்துள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான "தி சபர்மதி ரிப்போர்ட்" படத்தை, நாடாளுமன்ற வளாகத்தில் அப்படக்குழுவினருடன் பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
இதுபற்றி பேசியுள்ள அப்படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸி, பிரதமருக்கு படம் மிகவும் பிடித்திருந்ததாகவும், அவர் தங்களது உழைப்பை பாராட்டியதாகவும் கூறியுள்ளார். அப்போது பிரதமரின் கண்கள் ஈரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐமேக்ஸ் டெக்னாலஜியை வைத்து தனது அடுத்த படத்திற்காக புதிய பரிசோதனையை மேற்கொண்டு வருவதாக கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் நோலன், ஐமேக்ஸ் கேமராவை வைத்து, புதிய படத்தை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
நோலன் பயன்படுத்தியது போல் ஐமேக்ஸ் டெக்னாலஜியை வேறு எந்த ஹாலிவுட் இயக்குநர்களும் பயன்படுத்தியதில்லை என்பதை சுட்டிக்காட்ட பல சான்றுகளும், தரவுகளும் இருக்கின்றன. 2008ல் வெளியான "தி டார்க் நைட்" திரைப்படத்தை ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தி எடுத்தார். ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவை ஒளிப்பதிவிற்கான மெயின் கேமராவாக பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது தான். அதன் பிறகு "இன்டர்ஸ்டெல்லார்" படத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஐமேக்ஸ் லென்ஸ்களை பயன்படுத்தி வெற்றியடைந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் காதலரை, அண்மையில் கோவாவில் மணந்தார். அப்போது அவர், காஞ்சிவரம் கைத்தறி புடவையை அணிந்திருந்தார். தங்க ஜரிகை உள்ளிட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த புடவையை உருவாக்க, 405 மணி நேரங்கள் செலவானதாக, அப்புடவையின் டிசைனர் அனிதா டோங்ரே தெரிவித்துள்ளார். அதேபோல், மணமகனின் உடையை உருவாக்க, 150 மணி நேரம் ஆனதாகவும் கூறியுள்ளார்.
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் ஐம்பதாவது படமான காதி அடுத்தாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் அனுஷ்கா ஷெட்டி மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாக வரவேற்பை பெற்றது.
அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம், பான் இந்திய அளவில் வெளியாகிறது. சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
புஷ்பா 2 திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.1,292 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு வர்த்தகமாகி சாதனை படைத்தது. அடுத்த பத்து நாட்களில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
GOOD BAD UGLY படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் நடிகர் அவினாஷ், “உங்களுக்குப் பிடித்த ஹீரோக்களை நேரில் சந்தித்துவிடாதீர்கள் என்ற வாசகத்தை யார் சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் அஜித் சாரைப் போல ஒரு ஹீரோவை சந்தித்திருக்க மாட்டார்கள் போல” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தனது காதலர் ஆண்டனியை சமூக வலைதளம் மூலம் அறிமுகம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். அதன்படி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி திருமணம் கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் தங்களுடைய திருமணத்தின் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். முன்னதாக சில தினங்களுக்கு முன் இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது கிறிஸ்தவ முறைப்படியும் நடந்துள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் சூர்யா 45-ஆக உருவாகிவருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் காமெடி நடிகரான யோகி பாபு மற்றும் நடிகை ஷிவாதாவும் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
விசிக கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவரே திமுக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசியிருக்கும் இயக்குநர் அமீர், “தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே” என கூறியுள்ளார்.
ஹிந்தியில் பிரபல டிவி ஷோவான கபில் சர்மா ஷோவுக்கு அட்லீ மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் சென்றுள்ளனர். அப்போது அட்லீயின் தோற்றம் பற்றி கிண்டல் செய்யும் வகையில் பேசிய கபில் சர்மா, தயாரிப்பாளர்கள் உங்களை பார்த்தவுடன் அட்லீ எங்கே என தேடுவார்களாமே என நிறத்தை மையப்படுத்தி கேலி செய்துள்ளார்.
அதற்கு பதில் கொடுத்திருக்கும் இயக்குநர் அட்லீ, "ஏ.ஆர்.முருகதாஸ் சார் தான் என் முதல் படத்தின் தயாரிப்பாளார். அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். ஏனென்றால் எனது தோற்றத்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. என்னுடைய கதையையும், அதை நான் சொன்ன விதத்தையும் மட்டுமே அவர் பார்த்தார். இதைவைத்து உலகம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் ஒருவரின் தோற்றத்தை பார்த்து அவர்களை மதிப்பிடக்கூடாது, அவர்களின் மனது எப்படி இருக்கிறது என்பதை பார்த்து எடைபோடுங்கள்” என அட்லீ பதிலடி கொடுத்து இருக்கிறார்.