அமைச்சர் லட்சுமி நாராயணன் - விக்னேஷ் சிவன் PT Web
சினிமா

விக்னேஷ் சிவன் அரசு சொத்தை விலைக்கு கேட்டாரா? புதுச்சேரி அமைச்சர் விளக்கம்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு கேட்டதாக செய்திகள் வெளியான நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் லட்சுமிநாராயணன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Rishan Vengai

திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய புதிய திரைப்படத்திற்காக புதுச்சேரியில் உள்ள பல்வேறு சினிமா படப்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

அப்போது சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய அவர், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான சீகில்ஸ் ஓட்டலை தமக்கு விலைக்கு தருமாறு கேட்டதாகவும், அதற்கு அமைச்சர் தரமுடியாது என்று கூறிவிட்டதாகவும், அதற்குபிறகு ஒப்பந்த அடிப்படையில் தர முடியுமா என்று கேட்டபிறகு அமைச்சர் ஒப்புதல் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

புதுச்சேரி

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு விக்னேஷ் சிவன் மீது பல்வேறு விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டன. சமூகவலைதளங்களில் பல மீம்கள் உருவாக்கப்பட்டு அரசு சொத்தையே விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன் என பேசுபொருளாக மாறியது.

விளக்கம் கொடுத்த விக்னேஷ் சிவன்..

அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக பரவிய செய்தியை தொடர்ந்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்தார்.

அந்தப் பதிவில், “என்னை பற்றிய தவறான செய்தி ஒன்று பரவிவருகிறது. உண்மையில் அன்று என்னுடைய புதிய படத்திற்காக புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்பதற்காகவே மரியாதை நிமித்தமாக அமைச்சரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது என்னுடன் வந்திருந்த உள்ளூர் மேலாளர் ஒருவர், நான் அமைச்சருடன் சந்தித்து பேசிய பிறகு ஏதோ அவரிடம் விசாரித்தார். அதை நான் அமைச்சரிடம் கேட்டதாக தவறுதலாக செய்தி பரவிவருகிறது. அதை தெளிவுபடுத்தவே இந்த பதிவை வெளியிடுகிறேன்” என்று தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று விளக்கமளித்திருந்தார்.

உண்மையில் என்ன நடந்தது? அமைச்சர் விளக்கம்..

விக்னேஷ் சிவன் விளக்கமளித்த பிறகு அவ்விவகாரத்தில் சம்மந்தப்பட்டவரான அமைச்சர் லட்சுமிநாராயணன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன்

இதுகுறித்து பேசியிருக்கும் அமைச்சர், “இயக்குநர் விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தவும், இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் அனுமதி கேட்டு என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வந்திருந்த உள்ளூர் சினிமாத்துறையை சேர்ந்த நபர் என்னிடம் ‘அரசுக்கு சொந்தமான ஓட்டல் விலைக்கு வருவதாக சொல்லப்படுகிறது, அதை விலைக்கு தரமுடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘அது தவறான தகவல், அப்படி எல்லாம் அரசுக்கு சொந்தமான சொத்தை விலைக்கு தரமுடியாது’ என்று மறுத்துவிட்டேன். நேரடியாக விக்னேஷ் சிவன் என்னிடம் அப்படி கேட்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.