விஜயின் புலி திரைப்படம் web
சினிமா

”27 வருட உழைப்பு போச்சு.. வேறொருவர் என்றால் தற்கொலை பண்ணிருப்பாங்க” - ’புலி’ பட தயாரிப்பாளர் வேதனை

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி படத்தின் தோல்வி குறித்து பேசியிருக்கும் தயாரிப்பாளர் PT செல்வகுமார், தன்னுடைய 27 வருட உழைப்பு ஒரே படத்தில் காலியானதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

விஜய் நடிப்பில் வெளியான புலி படம் தோல்வி அடைந்தது குறித்து பேசியிருக்கும் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ’புலி’. இப்படத்தில் விஜய் உடன் நடிகை ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி ஹாசன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை தமீன்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் SKT ஸ்டுடியோஸ் முதலியவற்றின் கீழ் ஷிபு தமீன்ஸ் மற்றும் பிடி செல்வகுமார் ஆகியோரால் தயாரித்திருந்தனர்.

புலி திரைப்படம்

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான புலி திரைப்படம், அதற்கு நேரெதிராக மாறி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. படம் வெளியாகும்வரை அது குழந்தைகளுக்கான திரைப்படம் என்று சொல்லாத படக்குழு, படம் வெளியான பிறகு குழந்தைகளுக்கான படம் என மார்க்கெட்டிங் செய்தது. ஆனாலும் படம் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதால் தோல்வியை தழுவியது.

புலி திரைப்படம்

130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் 100 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

வேறொருவராக இருந்தால் தற்கொலை பண்ணிருப்பாங்க.. 

புலி திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் முன்னாள் PRO-வுமான PT செல்வகுமாருக்கு, 125 படங்களை வெளியிட்டதற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் மேடையில் பேசிய PT செல்வகுமார், “ஒருநாள் விஜய் வீட்டுக்கு கூப்பிட்டு அண்ணே அடுத்தபடம் நீங்கதான் பண்ண வேண்டும் என்று சொன்னார். நான் ஷாக்காகி PRO தானே என்று கேட்டேன், எத்தனை நாள் PROஆகவே இருப்பீங்க என்னை வச்சி படம் புரொடியூஸ் பண்ணுங்கனு விஜய் சொன்னார். நான் என்ன சொல்றீங்கனு பேச்சுவராமல் உளர ஆரம்பித்துவிட்டேன். ஆமாம் அண்ணே சிம்புதேவன் டைரக்டர், குழந்தைங்களுக்கு பிடிக்கிற மாதிரி ஒரு படம் நீங்க புரொடியூஸ் பண்ணுங்கனு சொன்னார். சரி என்று நம்ம விஜய் வச்சி படம் பண்ணபோறோம் என்ற மகிழ்ச்சி அதிகமாக இருந்தது.

புலி திரைப்படம்

முதலில் கதையின் படி வில்லி கதாபாத்திரத்திற்கு நடிகை ஷோபனாவும், தளபதியாக நாசரும் தான் இருந்தனர். நான் தான் அது நன்றாக இருக்காது ஸ்ரீதேவியை நடிக்கவைக்கலாம் என்று சொன்னேன், அவரை எப்படி அழைத்துவர முடியும் என சொன்னார்கள். ஆனால் நான் 3 நாட்கள் மும்பையிலேயே தங்கியிருந்து அவருடைய கால்ஷீட் வாங்கிவந்தேன். அதேபோல சுதீப்பிடம் சென்று அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து பாதி பணம் உடனடியாக கொடுத்து நடிக்க கால்ஷீட் வாங்கினேன்.

எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் இவன் எப்படி விஜய்க்கு மிக நெருக்கமாக இருக்கிறான், எதுவென்றாலும் விஜய் செல்வக்குமாரிடம் தான் கேட்கிறார் என்று பலபேரால் நான் துரோகம் இழைக்கப்பட்டேன். படத்திற்கு முதல்நாள் விஜய் வீடு, விஜய் அப்பா வீடு, என் வீடு என அனைத்திலும் ஐடி சோதனை நடந்தது, படம் வெளியாகாதோ என்ற சூழல் உருவானது, துரோகிக்கு கூட அந்த நிலை வரக்கூடாது. நான் ஒன்றும் பணக்கார வீட்டு பிள்ளை இல்லை. என்னிடம் இருந்த ஒட்டுமொத்த பணம், வீட்டு பத்திரம் என அனைத்தையும் போட்டுத்தான் படத்தை வெளியிட்டேன்.

என்னை நம்பி, ஒரு பத்திரிக்கையாளன், PRO-வை நம்பி ஒருவர் படம் கொடுத்திருக்கிறார், அவரை நான் ஏமாற்றமாட்டேன் என கடினமாக போராடிதான் படம் வெளியானது. ஆனால் என் கெட்ட நேரம் படம் பயங்கர தோல்வி, என் 27 வருட உழைப்பு, ஒரே படத்தால் சுக்குநூறாகிப்போனது. வேறொருவராக இருந்தால் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள்” என பேசியுள்ளார்.