மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சரவணன் கைது  facebook
சினிமா

செக் மோசடி வழக்கு | பாகுபலி, பைரவா பட தயாரிப்பாளர் சரவணன் கைது!

ஒரு கோடி ரூபாய் செக் மோசடி செய்த வழக்கில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

பாகுபலி, புலி, பைரவா போன்ற படங்களின் வினியோகஸ்தரும், மாசாணி மற்றும் ஜாக்சன் துரை போன்ற தயாரிப்பாளருமான கிரீன் புரொடகசன்ஸ் சரவணன் ரூ 1.03 கோடி செக் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தயாரிப்பாளரும் ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் உரிமையாளருமான சரவணன் பாகுபலி, புலி, பைரவா, மாசாணி, ஜாக்சன் துரை போன்ற படங்களை தயாரித்துள்ளார். படங்களின் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். இவரின் தயாரிப்பில் ஜீ வி பிரகாஷ் நடித்துள்ள அடங்காதே படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சரவணன் கைது

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பூவிருந்தவல்லியை சேர்ந்த விநியோகஸ்தர் கண்ணப்பன் என்பவரிடம் 1.03 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு செக் மோசடியில் ஈடுபட்டதாக கண்ணப்பன் தயாரிப்பாளர் சரவணன் மீது நீதிமன்றத்தில் புகாரளித்திருந்தார். இதனால் நீதிமன்றம், தயாரிப்பாளர் சரவணனை கைது செய்து 30 நாட்களுக்குள் சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து விநியோகஸ்தரும் ஸ்ரீ கிரீன் புரொடகசன்ஸ் நிறுவனருமான சரவணனை கே.கே நகர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சரவணன் கைது செய்யப்பட்டது தமிழ் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.