’96’ பட இயக்குநர் பிரேம்குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அவர், ஃபஹத் பாசிலை வைத்து த்ரில்லர் படம் ஒன்றை இயக்குவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி `96', `மெய்யழகன்' என உணர்வுப்பூர்வமான படங்கள் மூலம் நம்மைக் கவர்ந்தவர் இயக்குநர் பிரேம்குமார். அடுத்ததாக ’96’ படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவார் என்ற பேச்சுகள் எழுந்தன, இன்னொருபுறம் வேல்ஸ் நிறுவனத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், ”தனது அடுத்த படம் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகிறது” எனக் கூறியுள்ளார் பிரேம்குமார்.
அதில், "அடுத்ததாக இரண்டு - மூன்று கதைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அதில் விக்ரமுடன் இணையும் படத்தின் கதை எழுத வேண்டும். அதற்கு ஒரு நான்கு மாதங்கள் தேவைப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்து இயக்கும் படம் பற்றி அவர், "இப்போது எழுதும் கதை ஜானராக பார்த்தால் என் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம். ஆனால் ஒற்றுமை என்னவென்றால், உணர்வு ரீதியாக உங்கள் மனத்தைத் தொடும் விஷயம் இதிலும் இருக்கும். இப்போது எழுதிக் கொண்டிருக்கும் த்ரில்லர் மனதில் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இது ஒரு த்ரில்லர், சண்டைகள் எல்லாம் இருக்கிறது என்பதால் இதை கொஞ்சம் தாமதமாக பண்ணிக் கொள்ளலாம். ’இப்போதைக்கு மென்மையான படம் எடுப்பவன் என்ற இமேஜ் உனக்கு இருக்கிறது. அதை உடனே மாற்ற வேண்டாம்’ என உடன் இருப்பவர்களே கூறினார்கள். ஆனால், எனக்கு அதைத்தான் உடனடியாக மாற்ற வேண்டும் எனத் தோன்றியது.
மேலும் ஃபஹத் சாருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டது. கதையை ஒரு 45 நிமிடங்கள்தான் கூறினேன். சொல்லும் போதே அவரது முகபாவங்கள் மாறுவதை என்னால் உணர முடிந்தது. அது எனக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுத்தது. இது நேரடி தமிழ்ப் பாடமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் ஜனவரியில் துவங்கும்” எனக் கூறியுள்ளார்.