தமிழ் சினிமாவில் ஹீரோ-ஹீரோயின் காம்போவை கடந்து ’கவுண்டமணி - சத்திய ராஜ், வடிவேலு - பார்த்திபன், கவுண்டமணி - கார்த்திக்’ என பல கதாநாயகன் - காமெடியன் காம்போவானது ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம்வந்துள்ளது.
அப்படி 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் காம்போவாக வலம்வந்த கதாநாயகன் - காமெடியன் ஜோடி என்றால் அது பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவர் தான். இரண்டுபேருமே திரைப்பயணமும் ’காதலன்’ என்ற திரைப்படம் மூலம்தான் அசுர வளர்ச்சியை பெற்றது.
அதுவரை கிராமப்புற கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்துவந்த வடிவேலு, காலேஜ் ஸ்டூடண்ட்டாக காதலன் திரைப்படத்தில் பிரபுதேவா உடன் செம லூட்டி அடித்திருப்பார். ஒரு நடிகர் என்பதை தாண்டி வடிவேலுவின் நடன திறமைக்கும் தீணிப்போட்டது காதலன் திரைப்படம்.
அதற்குபிறகு அவர்கள் சேர்ந்து நடித்த மிஸ்டர் ரோமியோ, ராசய்யா, மனதை திருடிவிட்டாய், எங்கள் அண்ணா, காதலா காதலா என அனைத்து படங்களில் காமெடிக்கள் தூள் கிளப்பியிருக்கும். அதிலும் மனதை திருடிவிட்டாய் பிரபுதேவா-வடிவேலு காம்போவிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு திரையில் இருவரும் சேர்ந்து நடிக்கவிருப்பதாகவும், புதிய படத்தில் சேர்ந்து பணியாற்றவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் சேர்ந்து திரையை பகிர்ந்து கொண்டது எங்கள் அண்ணா திரைப்படத்தில் என்றாலும், அதற்குபிறகு பிரபுதேவா இயக்கிய போக்கிரி மற்றும் வில்லு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் வடிவேலு.
இதனிடையே சில சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் பிரபுதேவா மற்றும் வடிவேலு சந்தித்து கொண்ட நிலையில், ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து சிங் இன் த ரைன் பாடலை பாடி மனதை திருடிவிட்டாய் படத்திற்கே ரசிகர்களை கொண்டு சென்றனர். அப்போதே இரண்டு பேரும் சேர்ந்து புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அது தற்போது கூடிவந்துள்ளது.
வெளியாகியிருக்கும் அறிவிப்பின் படி, பிரபுதேவாவை வைத்து முசாசி என்ற திரைப்படத்தை இயக்கிவரும் சாம் ரோட்ரிக்ஸ் வடிவேலு மற்றும் பிரபுதேவா இணையும் படத்தையும் இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கும் இப்படத்தை கண்ணன் தயாரிக்க உள்ளார். இந்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.