செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
பவன் கல்யாணும் அன்னா கோனிடலாவும் தங்களின் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். 2013-ஆம் ஆண்டு அன்னாவைத் திருமணம் செய்வதற்கு முன்பு, பவன் கல்யாணுக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகியிருக்கிறது. தற்போது 3 மனைவியைப் பிரிவதாக வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
பவன் கல்யாண் 1996-ஆம் ஆண்டு வெளியான 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சராக உள்ளார்.
1997-ஆம் ஆண்டு நந்தினி என்பவரை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், நடிகை ரேணு தேசாயுடனான உறவு காரணமாக இருவரும் பிரிந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. 2008-ஆம் ஆண்டு இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றனர்.
அதன்பின் 2009-ஆம் ஆண்டு ரேணு தேசாயை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 2012-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
ஒரு வருடத்திற்குப் பிறகு, 2013-ஆம் ஆண்டு அன்னா கோனிடலா என்ற ரஷ்யப் பெண்ணை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கும் இரு குழந்தைகள் உள்ளனர். 13 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இருவரும் பிரிவதாகத் தற்போது தெரிவித்துள்ளனர்.
"எங்கள் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட பிறகு, பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமண உறவு முடிவுக்கு வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமையான குழந்தைகளுக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராகவும் தொடர்வோம். அவர்களின் மகிழ்ச்சியும் நலனும் எப்போதும் எங்கள் இருவரின் முன்னுரிமையாகவே இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர்.
பவன் கல்யாணின் 3 திருமணமும் முடிவுக்கு வந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.