Munishkanth Kaakee Circus Review
ஓடிடி திரைப் பார்வை

சிறைக்குள் நடக்கும் திருட்டு, குற்றவாளியை துரத்தும் போலீஸ்! | Kaakee Circus Review | Munishkanth

ஒரு திருட்டு, அதுவும் சிறைக்குள் நடக்கும் திருட்டு, திருடியது யார் என்ற விசாரணை, இடையில் ஒரு காதல் கதை என 7 எபிசோட்களில் ஒரு சுவாரஸ்ய காமெடி சீரிஸ் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் அமீன் பிரீஃப்.

Johnson

சிறைச்சாலைக்குள் திருட்டும், குற்றவாளி தேடலுமே `காக்கி சர்க்கஸ்'

தமிழ்நாடு - கேரளா எல்லையில் இருக்கும் துணை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் அன்புச் செல்வன் (முனீஷ்காந்த்). அவர் குழுவில் பணியாற்றும் சிறைக்காவலர் அர்ஜூன் (சுபாஷ் செல்வம்). இந்தச் சிறை மிக வித்தியாசமான வழக்கங்களைக் கொண்டது. கைதிகளை அடிப்பதைவிட, அவர்கள் படிக்க வேண்டும் என புத்தகங்களைக் கொடுக்கிறார் கண்காணிப்பாளர் அன்பு.

Subash Selvam

இன்னொரு வினோத பழக்கம், அந்தச் சிறையின் உள்ளே இருக்கும் கண்ணகி கோயில் உண்டியலில், கைதிகள் அனைவரும் காணிக்கை கொடுக்க வேண்டும். அது வருடம் ஒருமுறை ஊர்மக்களிடம் ஒப்படைக்கப்படும். சிறையில் வேலை, ஸ்ரீதேவி (வின்சு) உடன் காதல் என நகரும் அர்ஜூன் வாழ்க்கை, சிறையில் இருக்கும் உண்டியல் திருடப்பட்ட பின் மாறுகிறது. உண்டியலைத் திருடியது யார்? அவனைப் பிடித்தார்களா, இல்லையா என்பதுதான் ஸீ5யில் வெளியாகியுள்ள இந்த சீரிஸின் மீதிக்கதை.

ஒரு திருட்டு, அதுவும் சிறைக்குள் நடக்கும் திருட்டு, திருடியது யார் என்ற விசாரணை, இடையில் ஒரு காதல் கதை என 7 எபிசோட்களில் ஒரு சுவாரஸ்ய காமெடி சீரிஸ் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் அமீன் பிரீஃப்.

Munishkanth

முதன்மைப் பாத்திரத்தில் வரும் சுபாஷ் செல்வம் சீரியஸ் காட்சிகளில் மட்டும் கவனிக்க வைக்கிறார். ஆனால் ரொமான்ஸ், காமெடி காட்சிகளில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. முனீஷ்காந்த் முன்பே பல முறை பார்த்து பழகிய விஷயங்களை ஒரு ஜெயிலர் வேடத்தில் வந்து செய்கிறார். காட்சியில் காமெடி பெரிதாக வேலைக்கு ஆகவில்லை என்பதால், அவர் சார்ந்த காமெடி காட்சிகள் எல்லாம் அவுட். கதையை இன்னும் சுவாரஸ்யமாக அப்துல் லீ மூலம் சில காமெடிகளை முயற்சிக்கிறார்கள். அது ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறது. மையக்கதையில் வரும் அர்ஜூன் - ஸ்ரீதேவி காதலைவிட, மனோஜ் - ஷாலி இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

நீரஜ் ரவியின் ஒளிப்பதிவு இந்த சீரிஸுக்கு பெரிய பலம். மிகத் தரமாகவும், சுவாரஸ்யமான கோணங்கள் மூலமும் ஈர்க்கிறார். விபின் பாஸ்கர் பின்னணி இசை காட்சிகளின் உணர்வை ஓவராகவே கடத்துகிறது. அதைக் கொஞ்சம் அளந்து வாசித்திருக்கலாம். பல இடங்கள் ஓவர் டோஸ் ஆகத்தான் இருக்கிறது.

Gowthami

இதன் சிக்கல்கள் என்ன என்றால், இன்னும் சுவாரஸ்யமாக எழுதி இருக்க வேண்டும் என்பதே. சிறைச்சாலைக்குள் நிகழும் திருட்டு, திருடனுக்கு போலீசுக்குமான ஈகோ மோதல் என களம் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் அது எழுதப்பட்ட விதம் மிகவும் அலுப்பை தரக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக திருடன் இவன்தான் எனச் சொல்லிவிட்டு, அந்த கேட் & மவுஸ் கேம் விளையாடப் போகிறார்கள் என்றால், அதற்கு தேவை மிக சுவாரஸ்யமான திரைக்கதை. அது இதில் சுத்தமாக மிஸ்ஸிங். ஹீரோவுக்கு ஏன் இந்த திருடனைப் பிடிப்பது முக்கியம் எனச் சொல்லப்படும் காரணமும், ஏதோ சொல்ல வேண்டுமே என சொன்னதுபோலதான் இருக்கிறது.

மொத்தத்தில் சுவாரஸ்யம் பெரிதாக தேவை இல்லை, ஆங்காங்கே ரசிக்க முடிந்தால் போதும் என்றால் இந்த சீரிஸ் உங்களுக்கானது.